மறக்கமுடியாத போராட்டத்தில் '9 - மறைக்கப்பட்ட கதை' - பனங்காட்டான்


கடந்த வருட மே, ஜுன், ஜுலை ஒன்பதாம் திகதிகளின் போராட்டங்கள் கற்றுத்தந்த அரசியல் பாடங்கள் வித்தியாசமானவை. இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னைய காலங்களில் இடம்பெற்ற சதிப்புரட்சிகளின் தொடர்ச்சியாக இதனைப் பார்க்கலாம். இதற்கு ஷபோதை| ஊசி ஏற்றுவதைப் போன்று வெளிவந்துள்ளது விமல் வீரவன்சவின் '9 - மறைக்கப்பட்ட கதை' புத்தகம். 

கடந்த வருடத்தின் மூன்று தொடர்ச்சியான 9ம் திகதிகள் அரசியலில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது இலகுவாக மறந்துவிடக்கூடியதன்று. 

கடந்த மே மாதம் 9ம் திகதி மகிந்த ராஜபக்ச தமது பிரதமர் பதவியை துறந்தார். நிதி அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச ஜுன் 9ம் திகதி பதவி துறந்தார். இறுதியாக ஜுலை 9ம் திகதி கோதபாய ராஜபக்ச தமது பதவியைத் துறப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக நாட்டை விட்டு தப்பியோடினார். 

அதிகார வம்ச பலத்தோடு ஆட்சியிலிருந்த மூன்று சகோதரர்களுக்கு இப்படியொரு முடிவு வருமென எவரும் எண்ணியிருக்கவில்லை. இந்த எதிர்பாராத நிகழ்வுகளை மையப்படுத்தி ராஜபக்சக்களின் ஆட்சியில் பதவி சுகபோகங்களை அனுபவித்த விமல் வீரவன்ச வெளியிட்ட ஒரு புத்தகம் கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இந்த சிங்கள புத்தகத்தின் பெயர் ஷநமய - செங்கவுணு கதாவ| (ஒன்பது - மறைக்கப்பட்ட கதை). இப்புத்தகம் வெளியான சில மணித்தியாலங்களிலேயே இதில் குறிப்பிடப்பட்ட தெரிந்ததும் தெரியாததுமான விடயங்கள் - உண்மையோ பொய்யோ என அறிய முன்னரே உயர் மட்டங்களில் சந்தேகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அன்றைய ஜனாதிபதி கோதபாயவையும் அவருக்கு நம்பிக்கையான பாதுகாப்பு அதிகாரிகளையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது எனவும், கோதபாய பதவி விலகும்போது ரணிலும் பதவி நீக்கப்பட வேண்டுமென அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பியிருந்தன எனவும், இது தொடர்பான நடவடிக்கைகளிலும் அரகலய போராட்டத்திலும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி பிரதான பங்கு வகித்தாரெனவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை - இன்றைய அரசியல் களத்தில் ஒரு வெடிகுண்டாகவே நோக்கலாம். 

கடந்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி மிரிகானாவிலுள்ள கோதபாயவின் இல்லத்தின் முன்னால் ஆரம்பித்த போராட்டத்தின் சில நாட்களில் விமல் வீரவன்சவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி வீச கோதபாய விரும்பியிருந்தார். ஆனால், அதனைத் தெரிந்து கொண்டு அதற்கு முன்னராக விமல் வீரவன்ச தமது பதவியை துறந்ததோடு பொதுஜன பெரமுனவின் கூட்டிலிருந்தும் விலகிக் கொண்டார். இதன் பின்னர் அரகலய போராட்டத்தில் இவர் மறைகரமாக இருந்ததும் பொதுவெளியில் அறியப்பட்டது. 

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ராஜபக்சக்களுக்கு எதிரான சில உதிரிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி ஒன்றை இவர் உருவாக்கினார். இவர் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி ஜனாதிபதியானது. இவர் எழுதியுள்ள நூலின் உண்மைத்துவத்தை அறிய மேலே குறிப்பிடப்பட்ட பின்னணி அவசியமாகும். 

கடந்த வருட ஜுலை மாத முதல் வாரத்தில் கோதபாயவை ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அப்போதே வெளியான முக்கிய தகவல். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, முப்படைகளின் பிரதம தளபதி சவேந்திர சில்வா உட்பட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் இதனைத் தெரிந்;திருந்தும் நடவடிக்கை எடுக்காது கொலை முயற்சித் திட்டத்துக்கு சாதகமாக இருந்ததாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகியிருந்தன. 

மகிந்தவை பதவி துறக்க வைத்தால் தமக்கு எதிரான போராட்டம் கைவிடப்படலாமென குருட்டுத்தனமாக நம்பிய கோதபாய, மகிந்தவை நெருக்கியே பதவி துறக்க வைத்தாரென்பது மகிந்தவின் புதல்வர்கள் ஊடாக வெளியான மற்றொரு தகவல். இதன் தொடர்ச்சியாக மே மாதம் 12ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக கோதபாயவினால் நியமிக்கப்பட்டார். 

விமல் வீரவன்சவினால் வெளியிடப்பட்ட புத்தகம், மே மாதம் ஒன்பதாம் திகதி கோதபாய மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. அத்துடன், இந்தியாவில் நடைபெற்ற பிராந்திய நட்பு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு மாநாட்டில் சவேந்திர சில்வா பங்குபற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் விமல் வீரவன்ச சுட்டியுள்ளார். இது, கோதபாய பதவி நீக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு சவேந்திர சில்வா ஊடாக இருந்தது என்பதை பூடகமாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது. 

கோதபாயவுடன் ரணிலையும் பதவி நீக்க வேண்டுமென அமெரிக்காவும் இந்தியாவும் தெரிவித்ததாகக் கூறும் விமல் வீரவன்ச, இவ்விடயத்தில் சவேந்திர சில்வாவின் வகிபாகம் என்னவாக இருந்ததென்பதை ஊகித்துக் கொள்ளலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகர் கருத்தோட்டத்துக்கு விட்டுள்ளது, அதேசமயம், அமெரிக்காவுக்கான தூதுவர் ஜூலி குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்து கொண்ட விதமும் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் இப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன. 

சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்த்தனவை அமெரிக்க தூதர் நேரில் சந்தித்து கோதபாய பதவி விலகப் போவதை முற்கூட்டியே தெரிவித்து, சபாநாயகரை ஜனாதிபதியாக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டாராயினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அது சாத்தியப்படாது என சபாநாயகர் பதிலளித்ததாகவும் இப்புத்தகம் தெரிவிக்கிறது. 

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த பொழுது மரணித்ததால் அரசியலமைப்பின்படி அன்றைய பிரதமர் டிங்கிரி பண்டா விஜேதுங்க  ஜனாதிபதியாக பதவியேற்றதை சபாநாயகர் அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டதென்றும் இந்நூல் தெரிவிக்கிறது. 

இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்கள் உடனடியாக மறுதலிக்கப்பட்டுள்ளன. கோதபாயவையும் படைத்துறை அதிகாரிகளையும் கொலை செய்ய நடவடிக்கை எடுத்தது பற்றிய தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. அமெரிக்க தூதுவர்; ஜூலியும் இப்புத்தகத்தில் தம்மைப் பற்றி குறிப்பிட்ட கருத்துகளை கற்பனைக் கதையென்று குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க தூதுவரின் செயற்பாடுகள் பற்றி பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கோதபாயவோடு ரணிலையும் பதவி நீக்குவது, சபாநாயகரை சந்தித்து ஜனாதிபதியாகப் பதவியேற்குமாறு வேண்டியது என்பவற்றில் எதனை அவர் மறுக்கிறார்? ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையுமே மறுக்கிறாரா? 

கோதபாய ஜனாதிபதியாக இருந்தபோது அநேகமாக தினசரி அமெரிக்க தூதுவர் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும், பல சந்தர்ப்பங்களில் அவர்மீது சில விடயங்களை திணித்து நிர்ப்பந்தித்ததாகவும், சில சமயங்களில் கோதபாய உளச்சித்திரவதைக்கு உள்ளானதாகவும்கூட அவரது பதவியின் இறுதிக் காலங்களில் செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமன்றி அரகலய போராட்டக்காரருக்கும் தூதுவர் ஜூலிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இவை எதுவுமே அதிகாரபூர்வமாக எப்போதும் வெளியிடப்படாதவை. 

விமல் வீரவன்சவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை கதாபாத்திரங்களும் இன்றும் உயிருடன் இருப்பவர்கள். நிகழ்கால அரசியலில் பழமும் தின்று கொட்டை போட்டவர்கள். இவர்களுள் பலர் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வர துடித்துக் கொண்டிருப்பவர்கள். இந்த வகையில் இந்தப் புத்தகம் பற்றிய தரவுகளுக்கு அவர்கள் வாய் திறந்தால் சில உண்மைகள் அம்பலமாகலாம். 

ஆகக்குறைந்தது சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தன இது பற்றிய அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய கடப்பாடுடையவர். இவர் வெளியிடும் தகவலின் ஊடாகவே விமல் வீரவன்ச, அமெரிக்க தூதுவர் ஜூலி உட்பட சம்பந்தப்பட்டவர்கள் யார், எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். 

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தளவில் சில விடயங்கள் அவருக்கு நன்கு தெரிந்தவையாக இருக்கும். சில சமயம் இந்த விடயங்கள் அவருக்கு சாதகமானவையாக அமையக்கூடும். போர்க்கால ராணுவ தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா இப்புத்தகம் பற்றி கருத்துக் கூறுகையில் ரணிலின் அரசியலுக்கு பலமூட்டுவதாகவும் சாதகமாகவும் விமல் வீரவன்ச இப்புத்தகத்தை எழுதியுள்ளதாகவும், ரணிலின் அமைச்சரவையில் சேர்ந்து கொள்ளும் நோக்கம் அவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு வகையில் பார்க்கின் இலங்கை அரசியலில் ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் போன்று இந்தப் புத்தகத்தை நோக்கின் அதில் தவறிருக்க முடியாது. 

இப்புத்தகம் தொடர்பாக அனைவருமே மௌனம் சாதிப்பவர்களாக இருப்பின் பொதுமக்கள் இருட்டினுள் கறுப்புப் பூனையை தேடிய கதையாகவே எல்லாம் முடிந்துவிடும்.

No comments