சுன்னாகம்:தலையிடி தரும் தொழிற்சாலை!



சுன்னாகத்தில் தடை உத்தரவையும் மீறி நடராசா ஜெயசீலன் எனும் வர்த்தகர் அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலையின் உற்பத்திச் செயற்பாடுகளை சட்டவிரோதமாக மேற்கொண்டதுடன் தொடர்ந்தும் அதன் உலோகக் கட்டமைப்புக்களையும் ஏனைய கட்டுமானங் களையும் விஸ்த்தரித்துவருகிறார்.


 சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் பகுதியில் மக்கள் செறிவாக வாழும் குடியிருப்புப் பகுதிக்குள் நடராசா ஜெயசீலன் எனும்  வர்த்தகர்  சட்டவிரோதமாக நிறுவி இயக்கும் அலுமினியப்பாத்திர உற்பத்தித் தொழிற்சாலையின் உற்பத்திச் செயற்பாடுகளை  உடன் நிறுத்துமாறு வலிகாமம் தெற்கு பிரதேசசபை இவ்வாண்டின் மார்ச் முதல் வாரத்தில்(2023.03.07) எழுத்துமூலம் உத்தரவிட்டிருந்தது. மக்களின் வீடுகளுக்கு மத்தியில் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் இத் தொழிற்சாலை அமைந்துள்ளதால் தமது சுற்றுச் சூழலான வளிமண்டலம், நிலம் மற்றும் நிலத்தடி நீர் என்பன உற்பத்தியின் போது வெளியேறும் அலுமினியக் கழிவுகளினால் மாசடைவதாகவும் அலுமினிய நஞ்சு மெல்லமெல்ல  உடல் ஆரோக்கியத்துக்கு பெருங்கேடும் உயிர் ஆபத்தும் விளைவிக்கக்கூடியது என்பதையும்  சுட்டிக்காட்டி  வலிகாமம் தெற்கு பிரதேச சபை,  மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.


 வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட்ட மூன்று அலுவலர்கள் அத்தொழிற்சாலையை வந்து பார்வையிட்டு அவ்விடம் அத்தகைய ஒரு தொழிற்சாலையை நடத்துவதற்கு பொருத்தமற்றது என பிரதேச சபைக்கு அறிக்கையிட்டதன் அடிப்படையில் அத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


 மக்கள் குடியிருப்பைத் தவிர்ந்த பகுதிகளுக்கு அல்லது அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு அத்தொழிற்சாலையை இடமாற்றுமாறும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வழிகாட்டல் ஆலோசனை வழங்கியிருந்தார்.


ஆனால் அத்தடை உத்தரவின் பின்பும் அலுமினியத் தொழிற்சாலை 10.04.2023 திங்கட்கிழமையும் அதற்கு முந்திய நாட்களிலும்  அலுமினியப் பாத்திர உற்பத்திச் செயற்பாட்டில் அதிக அலுமினியக் கழிவுகள் வெளியேறும் அலுமினியப்ப்பாத்திர வடிவாக்கம், அலுமினியப் பாத்திரங்களை வெட்டி மினுக்குதல் முதலிய உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.


 உற்பத்திசெய்யப்பட்ட அலுமினியப் பாத்திரங்கள்   11.04.2023 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணிக்கு இரகசியமாக உட்பாதையால் வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்படுவதை இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம். 


 பக்கத்து வீட்டாரின் அனுமதியின்றியும் பிரதேசசபையின் கட்டுமான அங்கீகாரமுமின்றியும் பக்கத்து வீட்டாரின் எல்லையில் சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட சுவரை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்குள் இத் தொழிற்சாலை சட்ட விரோதமாக இயங்குகிறது . 


மேலும் சட்டவிரோதமாக எல்லையில் எழுப்பப்பட்ட அச்சுவருடன் சேர்த்து மேலும் பல கட்டமைப்புக்களை உரிய அனுமதிகள் எதுவுமின்றி நடராசா ஜெயசீலன் இருவாரங்களுக்கு முன்பும் நிறுவியுள்ளதால் அது பற்றியும் சம்பந்தப்பட்ட அரச திணைகளங்களுக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் அயலவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இத்தொழிற்சாலையை ஏனைய குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு மத்தியில் அதேவேளை தானும் தனது குடும்பத்தினரும் வசிக்கும் வீட்டுடன் அவ்வர்த்தகர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக  சட்டவிரோதமாக இரகசியமாக நடத்திவருகிறார்.


இத் தொழிற்சாலை யிலிருந்து வெளியேறும் அலுமினியத் தூசு, அலுமினியத் துகள்கள் மற்றும் அலுமினியச் சிதறல்கள் அப்பிரதேசத்தின் வளிமண்டலம், நிலம், நிலத்தடி நீர் ஆகியவற்றை கடுமையாக மாசுபடுத்தியுள்ளது.


 அத்துடன் அத்தொழிற்சாலை அமைந்துள்ள அப்பகுதி தாழ்ந்த பகுதியாகவும் நிலத்தடி நீர் மிகக் குறைந்த ஆழத்தில் கிடைக்கக் கூடிய இடமாகவும் வலிகாமம் தெற்கின் பிராதான வெள்ள நீரோட்டப் பாதையாகவும் நெருக்கமான குடியிருப்புப் பிரதேசமாகவும் 250 மீற்றருக்குள் நெல் மற்றும் மரக்கறிப்பயிர்கள் பயிரிடப்படும் பரந்துபட்ட விவசாய நிலமுமாக, அத்துடன் இறைச்சி, பால் என்பவற்றுக்காக விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்படும் பிரதேசமுமாக இருப்பதனாலும் சுகாதார ரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும், விவசாய ரீதியாகவும் அலுமினியம் போன்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பயிர்களுக்கும் உயிரியல் ரீதியாக தீங்கு விளைவிக்கும்  நச்சு விளைவுகளை ஏற்படுத்தும்  பார உலோகங்களோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை  அப்பகுதியில் நிறுவ அனுமதிப்பற்கான ஏது நிலைகள் சட்டரீதியாகவும் சூழல் பாதுகாப்பு அடிப்டையிலும் எள்ளளவும் இல்லை என்பதை நாம்  தொடர்பு கொண்டு வினாவியபோது இத்றை சார்ந்த அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ள உள்ளூராட்சி, சட்டத்துறை , சூழலியல் மற்றும் விவசாயத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


நடராசா ஜெயசீலன் இச் சட்டவிரோத அலுமினியப் பாத்திர உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியவிதமும் அதனை குடியிருப்போருக்கும் அவர்களின் சுற்றாடலுக்கும் நச்சு மாசினை ஏற்படுத்தும் வகையில் இயக்கியமையும்   குடியிருப்பாளர்களின் உயிர் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைதலும் குற்றவியல் சட்டத்தின் கீழ்  ஒரு குற்றவியல் குற்றச்சாட்டாக நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட க் கூடிய தா கு ம் எனவும் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


காணிப் பற்றாக் குறையான நிலையில் தனது கிணற்றையும் மலசல கூடக் குழியையும் தனது வீட்டையும் ஒரு மீற்றருக்குள் கொண்டிருக்கும் வகையில் இத்தொழிற்சாலையை எனைய வீடுகளுக்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைத்துள்ளார் நடராசா ஜெயசீலன்.நிலத்தடி நீரிலும் அலுமினியக் கழிவுகள் சென்றடையும் நிலைமை தோன்றியுள்ளது. 

அலுமினிய நஞ்சேற்றத்தால் குடியிருப்பாளர்களுக்கு நரம்புத்தொகுதி, மூளை, என்புத்தொகுதி, சிறுநீரகம் சார்ந்த செயலிழப்புக்கள் ஏற்படும் அபாய நிலையுள்ளது.

இதுபற்றிய முறைப்பாடுகள் உரிய அரசாங்கத் திணைக்களங்களுக்கும் அதிகார சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் குடியிருப்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது

No comments