யாழ். உள்ளிட்ட ஐந்து நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி பாத யாத்திரை


எதிர்க் கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை யாழ்ப்பாணம் உட்பட ஐந்து நகரங்களில் இருந்து நாளைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் இதனை தெரிவித்ததுடன் இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும் என்றார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நாளை 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ இடம்பெறவுள்ளது.

வட பகுதிக்கான யாத்திரை காலை நல்லூர் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகும். யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று கிளிநொச்சி, வவுனியா என யாத்திரை செல்லவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில்  நாட்டின் 5 இடங்களில் இருந்து நாளை ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21 ஆம் திகதி கொழும்பை சென்றடையும். இதன் இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும்.அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் பாசத்திற்கான யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்க்கிறது.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் - என்றார்

No comments