புழல் சிறை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பியோடிய இலங்கையர்!


இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக

சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் காவல்துறையினர் இவர் மீது கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்றுப் புதன்கிழமை வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர். 

அப்போது இரவு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ளஉணவகத்தில் காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு காவல்துறையினர் சாப்பிடச் சென்றனர்.

அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக காவல்துறையினரிடம் கூறினார். மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த காவல்துறையினரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார். 

இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். 

தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது.

திருட்டு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றங்களுக்காக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து விசேட குழுக்கள், இலங்கை தமிழ் ஏதிலி முகாம்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

No comments