நீதிபதிகளை பதவி நீக்கும் 'இம்பீச்மென்ற்' சிங்கள தேச அரசியலில் புதியதன்று! பனங்காட்டான்


நெவில் சமரக்கூன், சரத் என்.சில்வா,  ஷிரானி பண்டாரநாயக்க ஆகிய மூன்று பிரதம நீதியரசர்கள் மீது இம்பீச்மென்ற் எனும் பதவி நீக்க

பிரேரணை கொண்டு வருவதற்கு பிதாமகராக அமைந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அரசியலமைப்பின் 107ம் பிரிவின் கீழ் அந்தக் கதவு இன்றும் திறந்தேயிருக்கிறது. 

2022ம் ஆண்டில் ஒரு வருட நீடிப்புப் பெற்ற இலங்கையின் 340 உள்;ராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது. மாநகர சபைகளும், பிரதேச சபைகளும் முறையே ஆணையாளர்களதும் செயலாளர்களதும் நிர்வாகத்தில் வந்துள்ளன. 

நாடாளுமன்றத்தின் ஊடாக சிலவேளை மேலும் ஒரு வருட நீடிப்பு வழங்கப்படலாமென்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதனால் 340 உள்ளூராட்சி மன்றங்களினதும் 8225 உறுப்பினர்களும் இப்போது 'முன்னாள்' களாகிவிட்டனர்.

ரணில் தலைமையிலான அரச இயந்திரம் தேர்தலுக்கு எதிராகவும், சுயாதீனமான என்று அழைக்கப்படும் தேர்தல் ஆணைக்குழு அதற்கு ஆதரவாகவும் - ஏறத்தாழ நாடாளுமன்றத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் போன்று மோதிக்கொள்ளும் அசாதாரண போக்கு தொடர்கிறது. 

மழை விட்டும் தூவானம் போகவில்லையென்ற பழமொழி போன்று ஏப்ரல் 25ம் திகதிக்குப் பின்னரும் இவ்விவகாரம் இழுபடவே போகிறது. இவ்விவகாரத்துக்குள் நீதித்துறையும் இழுத்து வரப்பட்டுள்ளதே அவதானிப்புக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை அரசாங்கம் பாராமுகமாக்கி நிராகரிக்கும் செயற்பாடு தொடர்கிறது. நீதிமன்றங்கள் தங்கள் பணியைத் தொடர்வதும், அரசாங்கத்தால் அவை கவனிக்கப்படாதிருப்பதும் நீதித்துறை மீதான அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. 

சமவேளையில், இத்தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களை இந்த மாதம் 23ம் திகதி முக்கியமான கலந்துரையாடலுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது. 

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைக்கக்கூடாதென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அது கிடைக்கப்பெறாத நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் இச்சந்திப்பு இ;டம்பெறுகிறது. 

17 மாவட்டங்களுக்கான முற்கூட்டிய வாக்களிப்பு அட்டைகள் அச்சடிக்கப்பட்டதாயினும், அதற்கான நிதி கிடைத்தால் மட்டுமே அவை கையளிக்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்த அரச அச்சகம், அப்படி எதுவுமே இதுவரை அச்சடிக்கப்படவில்லையென்று இப்போது கையை விரித்துள்ளது. இதே நிலைப்பாட்டில்தான் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவற்துறையும் இருக்கிறது. நிதி கிடைத்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுமென்பது இதன் அசைக்க முடியாத நிலைப்பாடு. 

அரசாங்க அச்சகத்தினதும், காவற்துறையினதும் அறிவிப்புகளை நோக்கும்போது, அரசாங்கம் பற்றிய இவைகளின் நிலைப்பாடு இரு வகைப்பட்டதாக இருக்கலாமென எண்ண வைக்கிறது. அரசாங்கத்திடம் நிதி இல்லை - எனவே அது உரிய நிதியை தராது ஏமாற்றலாமென்று நினைக்கிறார்களா? அல்லது அரசாங்கம் தேர்தலுக்கு சாதகமில்லாத நிலையிலிருப்பதால் அதற்கு அனுசரணையாக இயங்க வேண்டுமென விரும்புகிறார்களா? அநேகமாக இரண்டாவது அம்சமே காரணமாக இருக்கிறது என நம்ப இடமுண்டு. 

இந்த நிலைப்பாட்டை புரிந்து கொண்ட பாணியில், ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடைபெறும் சாத்தியமில்லையென்று தேர்தல் ஆணைக்குழுவும், பவ்ரல் அமைப்புப் போன்ற சுயாதீன நிறுவனங்களும் பகிரங்கமாக தெரிவித்துள்ளன. 

இவைகள் ஒருபுறம் நிகழ்ந்தேற, இன்னொரு புறத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீரத்நாயக்க முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். 2021ம் ஆண்டின் கணக்கு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் கடந்த 16ம் திகதிக்கு அடுத்துவரும் 14 நாட்களுக்குள் அதனை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுள்ளார். 

இந்த அறிவிப்பானது, ஏற்கனவே வேட்பாளர் நியமனம் தாக்கல் செய்த 58 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் சிலவற்றுக்கு நெருக்கடியைக் கொடுக்குமென எதிர்வுகூறப்படுகிறது. முக்கியமாக, தமிழர் தேசிய கட்சியொன்று இப்பிரச்சனையை எதிர்கொள்வதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தல் தொடர்பாக முன்னுக்குப்பின் வெவ்வேறு அறிவிப்புகள் தாறுமாறாக வந்து கொண்டிருக்கும் வேளையிலும், உயர் நீதிமன்றம் தேர்தல் நடைபெறாதிருப்பது தொடர்பான புதிய மனுவொன்றை விசாரணைக்கு எடுக்கும் முடிவை அறிவித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டுள்ள உயர் நீதிமன்றம் அதன் விசாரணையை யூன் 27ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

இந்த விவகாரங்களைப் பார்க்கின், அரச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத விடயத்தை நீதிமன்ற உத்தரவினூடாக தீர்த்துவிட முடியுமென இன்னும் சிலர் நம்புவதுபோல தெரிகிறது. இதன் சாத்தியப்பாடு பற்றி ஆராய்வதற்கு முன்னர், அரச உயர்மட்டங்களுடன் சட்டப்படி மோதிய நீதித்துறை கடந்த காலங்களில் சந்தித்த சில கசப்பான அனுபவங்களை மீள்நினைவுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. 

1977ல் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரதம நீதியரசராக தமக்கு மிக நெருக்கமான வழக்கறிஞர் நெவில் சமரக்கூன் கியூ.ஸியை அதேயாண்டில் நியமித்தார். நீதிபதி பதவி வகிக்காத ஒருவர் பிரதம நீதியரசராக நியமனமானது இதுவே முதற்தடவை. 1978 பெப்ரவரி 4ம் திகதி காலிமுகத்திடலில் நெவில் சமரக்கூன் முன்னிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார்.

1983ம் ஆண்டு பொது நிகழ்வொன்றில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பற்றி பாதகமான கருத்தொன்றை பிரதம நீதியரசர் கூறியதால், அவரை குற்றவியல் பிரேரணை (இம்பீச்மென்ற்) மூலம் பதவி நீக்க ஜே.ஆர். நடவடிக்கை எடுத்தார். 1984ல் இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நெவில் சமரக்கூன் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆஸ்திரேலியா பறந்துவிட்டார். 

இதேபோன்று 2001ல் பிரதம நீதியரசராகவிருந்த சரத் என்.சில்வாவையும் பதவி நீக்கும் பிரேரணை 77 எம்.பிக்களின் ஒப்பத்துடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதிருந்த அரசாட்சியின் ஸ்திரமற்ற நிலையால் பிரேரணையை தொடர முடியாமல் போய்விட்டது. 

இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசரான  ஷிரானி பண்டாரநாயக்கவை 2013 ஜனவரியில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு இம்பீச்மென்ற் பிரேரணை மூலம் பதவி நீக்கியது. 2015ல் ஆட்சி மாற்றத்தையடுத்து ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன அரசு  ஷிரானி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமித்ததாயினும், அவர் ஒருநாள் மட்டும் அப்பதவியை வகித்துவிட்டு ஓய்வு பெற்றுச் சென்றார். 

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தவேளையில் நீதிபதி ஒருவர் அவருக்கு சாதகமாக இயங்க மறுத்தமையால், அரச பேருந்துகளில் சென்ற காடையர்களால் அவரது இல்லம் தாக்கப்பட்டது. உயிராபத்தில் இருந்த நீதிபதி காவற்துறையின் உதவியை நாடினாராயினும், ஜனாதிபதி அலுவலகத்தின் அனுமதி கிடைக்காததால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. 

இலங்கையின் நீதித்துறையின் சீத்துவக்கேட்டுக்கு இவ்வாறான பல உதாரணங்கள் உண்டு. இவை நீதிக்கெதிராக அரச நிர்வாகம் நீதி வழங்கும் நடைமுறைகள். 

இலங்கை அரசியலமைப்பின் 107ம் பிரிவின்படி, பிரதம நீதியரசருக்கெதிராக மட்டுமன்றி உச்ச நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதிக்கெதிராகவும் பதவி நீக்கும் இம்பீச்மென்ற் நடவடிக்கையை முன்னெடுக்க இடமுண்டு.(The constitution in article 107 provides for the impeachment of not only the Chief Justice, but any judge of the Supreme Court or the Court of Appeal)

இலங்கையில் பிரதம நீதியரசருக்கெதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வழிவந்த ஜனாதிபதி ரணில், தேவையேற்படின் எப்போதாவது அதேவழியை பின்பற்ற மாட்டாரென்று  எண்ணக்கூடாது. ரணிலுக்கு இது நாகாஸ்திரமாக அமைந்தாலும் ஆச்சரியப்பட நேராது. 

No comments