வடக்கு கடல் வாடகைக்கு:வியாழன் போராட்டம்!

 


வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்கும் இலங்கை அரசின் புதிய முயற்சி உள்ளுர் மீனவர்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.ஆலம், மன்னார் மாவட்ட கிராமிய சம்மேளனத் தலைவர் ஜஸ்ரின் சொய்சா, மீனவ சமூகம் சார்பாக அன்ரனி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி,முல்லைதீவு மீனவ அமைப்புக்கள் வடக்கு கடல் பகுதியினை வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மன்னார் மாவட்ட மீனவர்களும் போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளனர்.

எனினும் அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா வடக்கு கடலை வாடகைக்கு விடுவது தொடர்பில் பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது. 


No comments