பிச்சையெடுத்து புத்தருக்கு பல்லக்கா?

 


வவுனியா வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும் என ஆலய நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடும் விதமாக, ஆலய நிர்வாகத்தினரால், மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணி, எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைய உள்ளது.

பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும், பேதங்களை மறந்து பேரணியில் பங்கேற்று, மத ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்சை எடுத்து தொடர்வது இன அழிப்பா, மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, எமது நிலம் எமது உரிமை என பதாதைகளை தாங்கியவாறு கோசமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


No comments