கிளிநொச்சி:கட்டுவதற்கு துணி கூட இல்லை!கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படும் கட்டுத்துணி கூட கையிருப்பில் இல்லாதுள்ளது.குறிப்பாக 72 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் சத்திர சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழமை போலவே முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிற்கு பணித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு முன்னாயத்த கூட்டத்தில் அடிப்படை மருந்துக்கள் உள்ளிட்டவற்றிற்கான பற்றாக்குறை தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் மருந்து தட்டுப்பாடு இலங்கை முழுவதும் உள்ள பிரச்சினையென விளக்கமளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அரசினால் முடியாவிடின் புலம் பெயர் உறவுகளது உதவிகள் ஊடாக மருத்துவ தேவைகளை நிறைவு செய்ய தயாராக உள்ள போதும் ஆளுநர் மற்றும் அரசின் கெடுபிடிகளால் முயற்சிகள் வெற்றிபெறாதிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர்.


No comments