மானிப்பாயில் வாள் வெட்டு - வாள் செய்து கொடுத்தவர் உள்ளிட்ட ஐவர் கைது


யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்.  வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த  இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் , இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை  இவர்களுக்கு வாளினை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றின் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் விற்ற நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர், அவர்களுக்கு வாளினை செய்து கொடுத்தவர் , வாள் செய்து கொடுக்க உதவியவர் மற்றும் மோட்டார் சைக்கிளை உதிரிபாகங்களாக விற்க உதவியவர் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் , மானிப்பாய் பகுதிகளில் இயங்கும் வன்முறை கும்பல்களையும் , அவர்களுக்கு உதவி செய்வோரையும் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments