இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்


கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

றோயல் கல்லூரியில் பழைய மாணவனாகக் கழித்த காலத்தையும், தனது பண்பையும் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள கல்லூரியில் இருந்து தாம் பெற்ற பங்களிப்பையும் ஜனாதிபதி இங்கு நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, றோயல் கல்லூரி மாணவராக சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சட்டத்துறைகள் குறித்தும் இளம் சட்டத்தரணிகளுக்கு எடுத்துரைத்தார்.

துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை பிரவேசத்திற்காக இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதன்போது, றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரொஹான் சஹபந்து வரவேற்று உரையாற்றியதுடன், அதன் செயலாளராக இருந்து ஓய்வுபெறும் ஹர்ஷன மாதராராச்சி கடந்த வருட அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார்.

றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ரொஹான் சஹபந்து மீண்டும் தெரிவுசெய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட லசித கனுவனாராச்சி நன்றியுரையை நிகழ்த்தினார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், ரோயல் கல்லூரி அதிபர் ஆர். எம். ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments