யாழ்ப்பாண விமான நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை



யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மேலும் விஸ்தரித்து , விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிதெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தீர்வையற்ற கடையினை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது சென்னைக்கு வாரத்தில் நான்கு  விமான சேவைகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.  எதிர்வரும் காலங்களில் ஒரு வாரத்தில், ஏழு விமான சேவைகள் நடத்தப்பட வேண்டும் என எயார்லைன்ஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

அதேபோல் இரத்மலானை விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில், உள்ளூர் விமான சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை  எடுத்துள்ளோம் .

அத்தோடு இந்த விமான நிலையத்தினை மேலும் விஸ்திரித்து, இங்கே பயணிக்கும் பயணிகளுக்கும், மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

வர்த்தக ரீதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது. அதேபோல மேலும் பல கடைகளை திறப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். 

தீர்வையற்ற கடைகளுக்காக ஒரு தனியான கட்டட தொகுதியினை அமைக்கவுள்ளோம். அதேபோல் விமானத்திற்குள் உள் நுழையும்,  வெளியேறும் பாதைகள் விஸ்தரிக்கப்பட்டு, பயணிகள் சௌகரியமாக பயணிக்கக் கூடியவராக ஏற்பாடுகள்  மேற்கொள்ள உள்ளோம்.

No comments