இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள்?
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா்.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக அந்த வழி மூடப்பட்டது. இதனால், அந்த வழியாகப் பயணிக்க வேண்டிய 37 இந்திய கொடி கொண்ட கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளன. அந்தக் கப்பல்களில் 1,109 மாலுமிகள் உள்ளனா். அவற்றில் சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தன. பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன.
கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டிஜிஎஸ்) சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சரக்குப் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் அந்த இயக்குநரகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தன.
வளைகுடா, ஹோா்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment