பூநகரி இலவங்குடா:பூநகரி பிரதேச செயலாளர் ஏமாற்று! பூநகரி இலவங்குடா கடற் பகுதியில் சிறுகடற் தொழிலுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள புதிய அட்டைப் பண்ணைகளுக்கு எந்தவித நடவடிக்கைகளையும் பூநகரி பிரதேச செயலாளர் எடுக்காது சிறுகடற் தொழிலுக்கு இடையூறு இன்றி காணப்படும் மூன்று அட்டைப் பண்ணைகளை மாத்திரம் அகற்றுமாறு அறிவித்தல்களை ஒட்டி இருப்பதானது எல்லோரையும் ஏமாற்றும் செயலாகும் என சிறுகடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி – பூநகரி இலவங்குடா கடற்பகுதியில் சிறுகடல் தொழிலுக்கு இடையூறாக உள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் தொடர்ந்து 86 ஆவது நாளாக, சிறுகடற் தொழிலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் பிரதேச செயலகத்தின் செயற்பாடு ஒரு கண்துடைப்பு எனவும், தொழிலுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறுகடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர் அகிலனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று அட்டைப் பண்ணைகளை மாத்திரம் அகற்றுமாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு 82 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருக்கின்றனர் இதில் 34 பேர் வரையில் தற்போது பண்ணைகளை அமைத்துள்ளனர் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள மூன்று பண்ணைகளும் எந்த விதமான அனுமதிகளும் பெறவில்லை. அவர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பத்தில் அதனையும் சீர் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.No comments