ரணிலின் சுதந்திர தின 'வெற்றி' உரைக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வழிவகுக்கும் - பனங்காட்டான்


இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை ஜெனிவாவை ஒதுக்கிவிட ரணில் வகுத்திருக்கும் திட்டத்தில் முக்கியமானது. அதேசமயம், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏற்பாடாகி விட்டதாக தமது சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடுவதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை வாய்ப்பளிக்கப் போகிறது.

வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் ஓர் அறிவிப்பை விடுத்தார். 

தமிழர் பிரச்சனையை அல்லது இனப்பிரச்சனையை வடக்கு மக்களின் அல்லது அந்தப் பிரதேசத்தின் பிரச்சனையாக மாற்றும் குறளிவித்தை அரசியலை தமக்கேயுரிய பாணியில் ரணில் ஆரம்பித்ததை இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியது. 

பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்தும் பலமாக எழுந்த குரல்கள் காரணமாக இறுதியில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளையும் இணைத்த கூட்டமாக இது மாற்றம்பெற்றது. சிங்கள அரசியல் கட்சிகளும், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் கட்சிகளும் இந்த மாதம் 13ம் திகதி இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் பங்குபற்றினர். 

சமவேளையில், மற்றொரு அரசியல் வெடிகுண்டையும் ரணில் விக்கிரமசிங்க தூக்கி வீசினார். பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறவுள்ள 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காணக்கூடியதாக இப்பேச்சுவார்த்தை இடம்பெறுமென்பது இந்த அறிவிப்பு. 

கடந்த வாரப் பத்தியில் குறிப்பிட்டது போன்று, 65 ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் - உடன்படிக்கைகள் - பங்களிப்புகள் - ஒத்துழைப்புகள் மூலம் தீர்வு காணப்பட முடியாது, பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்த போர்களையும் கண்ட இப்பிரச்சனையை 75 நாட்களுக்குள் ரணிலால் எவ்வாறு தீர்க்க முடியுமென்ற கேள்வி பலர் மனதிலும் உள்ளது. 

சின்னச் சின்ன இழுபறிகளுக்குப் பின்னர், திட்டவட்டமாக என்ன முடிவு எடுக்கப்பட்டதென்று எவருமே விபரிக்க முடியாத நிலையில் 13ம் திகதிய கூட்டம் முடிவுபெற்றது. இலங்கையின் சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் இந்தக் கூட்டம் பற்றி உப்புச் சப்பில்லாத வகையில் இதுவரை செய்திகளை வெளியிட்டுள்ளன. ஓர் ஆங்கிலப் பத்திரிகை, வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என்ற தலைப்பில் ஒரேயொரு முஸ்லிம் எம்.பியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது. 

ஆனால், தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தளவில் இந்தப் பேச்சுவார்த்தை முன்பக்கத் தலைப்புச் செய்தி (கொட்டை எழுத்துச் செய்தி என்றும் சொல்லலாம்). உதாரணத்துக்கு மூன்று தமிழ்ப் பத்திரிகைகளின் 14ம் திகதிய பதிப்பின் முதற்பக்க செய்திகளின் தலைப்புகள் பின்வருமாறு அமைந்திருந்தன: 

1. எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு.

2. 2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு.

3. பெப்ரவரி 4க்கு முன்னர் தீர்வின்றேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை! வெளிப்படையாக அறிவிப்பேன் என்கிறார் ஜனாதிபதி.

ஆனால், இந்தக் கூட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில், '2023 சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முன்னர் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண சகல அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து உடன்பாட்டுக்கு வரவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய நல்லிணக்கத்தினூடாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாட்டை ஜனாதிபதி கூட்டினாரென்று மேலும் இந்த ஆவணம் கூறுகிறது. 

ஆனால், இந்த மாநாட்டில் உரையாற்றிய ரணில் குதர்க்கமான ஒரு கருத்தை முன்வைத்தார்: 'நாம் தீர்க்க விரும்பும் பிரச்சனை இனப்பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது முக்கியமல்ல. பிரச்சனைக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க விரும்புகிறோம். அதற்கு இணைந்து சகல அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஓர் உடன்பாட்டை எட்டின. அதற்காகவே இந்தக் கூட்டம்" என்பது எடுத்த எடுப்பில் ரணில் முன்வைத்த விடயம். 

தற்போதுள்ள பிரச்சனை இனப்பிரச்சனையா அல்லது வேறு பிரச்சனையா என்ற சந்தேகம் ரணிலிடம் இருப்பதுபோல் தெரிகிறது. நாடாளுமன்றத்தின் சகல அரசியல் கட்சிகளும் எட்டிய உடன்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அவர் தெரிவித்ததானது மறைபொருளைக் கொண்டது. எதிர்காலத்தில் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது போகுமானால் அதனை மற்றைய கட்சிகளின் தலையில் சுமக்க வைப்பதற்கு முன்னேற்பாடாக இக்கருத்தை அவர் முன்வைத்திருப்பது போலவே தெரிகிறது. 

1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13வது திருத்தம், அதன் வழியாக அமைந்த மாகாண சபை முறைமை பற்றி பல தரப்பாலும் இங்கு கருத்துரைக்கப்பட்டது. 13ம் திருத்தத்தை நடைமுறைபடுத்துவதன் மூலமாகவே நல்லிணக்கம் தொடங்கப்பட வேண்டுமென்றும், உள்;ராட்சிச் சபைத் தேர்தல்கள் தாமதமின்றி நடத்தப்பட வேண்டுமென்றும் கோரப்பட்டது. 

(இத்தேர்தலுக்கு இந்த மாத இறுதியில் வேட்புமனுத் தாக்கல் கோரப்படுமென்று ஒரு செய்தி தெரிவிக்க, ஆறு மாதங்களுக்கு தேர்தல் பின்போடப்படலாமென்று இன்னொரு செய்தி சொல்கிறது). 

இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பது, வழிபாட்டுத்தலங்களை அச்சுறுத்தலின் கீழ் கொண்டு போகிறது என்ற முறைப்பாடுகளுக்கு தீர்க்கமான பதிலை ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் தனக்கு தெரிவிக்குமாறு அவர் இங்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்க, வடக்கிலும் கிழக்கிலும் படையினரும் தொல்பொருள் திணைக்களத்தினரும் பொதுமக்கள் காணிகளையும் வழிபாட்டுத்தல நிலங்களையும் அளவிடும் பணியை மக்கள் எதிர்ப்பையும் மீறி மூர்க்கத்தனமாக மேற்கொண்டிருந்தனர். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த மூன்று அம்சங்களை இங்கு முன்வைத்தது. அபகரிக்கப்பட்ட காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மாகாண சபைக்கான தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டுமென்பவையே இவை. இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக சம~;டி அடிப்படையிலான தீர்வு தேவையென்பதையும் கூட்டமைப்பு இங்கு சுட்டியது. 

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முக்கிய விடயமொன்றை இங்கு மிகத் துணிச்சலாக வெளிப்படுத்தினார். காணாமலாக்கப்பட்டோர் அனைவரையும் கொன்று விட்டீர்கள் என்று தலைமை மேசையில் ரணிலுக்கு அருகிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை நோக்கி சம்பந்தன் கூறியபோது கூட்டத்தில் சிறிது அதிர்ச்சி ஏற்பட்டது. இதற்கு எவரும் பதிலளிக்க முன்வரவில்லை. அதுமட்டுமன்றி, கூட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அறிக்கையிலும் சம்பந்தனின் அறிவிப்பு தவிர்க்கப்பட்டிருந்தது. 

பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏற்பாடான இக்கூட்டத்தில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக, சகல கட்சிகளையும் ஒன்றிணைந்து தீர்வைக்காண முன்வருமாறு கூறி, பந்தை லாவகமாக அவர்கள் தரப்புக்கு அடித்துவிட்டார் ரணில். இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மற்றைய நடவடிக்கைகளுக்கு ஏற்கனவேயுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனவரி மாதத்தில் தமிழ் கட்சிகளுடன் பேசுவதாக அறிவித்த ரணில், ஜனவரி 31க்கு முதல் அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டையும் கோரியுள்ளார். 

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக மண் என்பதை இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று ரீதியாக தமிழருக்கான சொந்த நிலம், மொழி, கலாசாரம் ஆகியவற்றோடு நாட்டின் மற்றைய நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது என்பதையும், 1833ம் ஆண்டில் ஆங்கிலேயர் இந்நாட்டை நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்ததன் பின்னரே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் தெளிவாகத் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்களுக்கும் முடிவுரை கூறுவது போன்ற பாணியில் கூட்டமைப்பின் சுமந்திரன் தமது கருத்தை கூறினார்: 'இப்போது அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது. ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றக்கூடியதாக ஜனாதிபதிக்கு சமாந்தரமாக மூன்று வழிகள் இருந்தால் நாங்கள் அதனை செய்வோம். தேர்தல் நடத்த ஒப்புக்கொண்டுள்ளோம். அனைத்துச் சட்டங்களையும் செயற்படுத்துவோம். இறுதித் தீர்வுக்கு ஒப்புக் கொண்டுள்ளோம். அப்போதுதான் 75வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி எதிர்பார்ப்பது போன்று அமையும்". 

ரணில் கூட்டிய சர்வகட்சி மாநாட்டின் பொழிப்பு என்று சொல்லக்கூடியதாக  சுமந்திரன் கூறியவை அமைந்துள்ளன. நல்லாட்சிக் காலத்தில் எவ்வாறு ரணிலை காப்பாற்றினாரோ அதுபோன்று இனிமேலும் காப்பாற்றக்கூடியதாக இவரது அறிவிப்பு காணப்படுகிறது. 

'தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வை வெளிச்சக்திகளின் பங்கேற்பின்றி, உள்நாட்டில் எமக்குள் நாமே பேசித் தீர்க்க முடிவு கண்டுள்ளோம்" என்று ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தின உரையில் எடுத்துக்கூறுவதற்கு சுமந்திரன் அடியெடுத்துக் கொடுத்துள்ளார். 

ஜெனிவா தீர்மானம் இலங்கையின் கழுத்தை நெரிக்க ஆரம்பி;த்துள்ளது. சர்வதேச நிதியுதவிகளுக்கு உள்நாட்டு அரசியல் தீர்வு அவசியமாகிறது. போர்க்குற்ற பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச நீதி விசாரணை பொறிமுறையிலிருந்து தப்பவும், அனைத்து உலகத்தை ஏமாற்றவும் ரணில்தரப்புக்கு இந்தப் பேச்சுவார்த்தை அவசியம். 

மறுபுறத்தில். சிங்கள ஆட்சித்தரப்புகள் மீண்டும் தமிழர் தரப்பை பேச்சுவார்த்தை என்று சொல்லி ஏமாற்றி விட்டன என்று சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்ட தமிழ் கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தை தேவைப்படலாம். 

இருதரப்பினரும் இதனை நன்கு புரிந்து கொண்டே பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்றுள்ளனர். ஆனதால் இப்பேச்சுவார்த்தையையிட்டு அதிகம் அலட்டிக் கொள்வதும், எதனையும் எதிர்பார்ப்பதும் உசிதமானதல்ல. இருப்பினும், ரணிலின் இருப்புக்கும் கதிரையின் பாதுகாப்புக்கும் நிச்சயமாக இது உதவும். 

No comments