அரிவரி குழந்தைகளுக்கு முடியாது:சிவி



தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சனை உண்டு என்று பாராளுமன்ற

உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேட்டுள்ளார். அதற்குப்பதில் அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சி.வி.விக்கினேஸ்வரன் சில அடிப்படை விடயங்களைப் புரிந்து கொண்டே சிங்கள அரசியல் வாதிகள் தமிழர்கள் பற்றி கேள்வி கேட்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பற்றி அறியாதவர்கள் கேள்வி கேட்டால் அரிவரி குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவது போல அவற்றிற்குப் பதில் அளிப்பது ஒரு சிரமமான காரியம். தமிழர்களே இந்நாட்டின் ஆதிக் குடிகள். சிங்கள மொழி 1400 வருடங்களுக்கு முன்னரதான் பிறந்தது. அதற்கு முன்னர் இந் நாட்டில் சிங்களவர் என்று ஒரு இனம் இருக்கவில்லை. 

நாடு சுதந்திரம் அடையும் வரையில் தமிழர்கள் இங்கு நாடு பூராகவும் பக்குவமாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்தார்கள். சட்டத்தின் முன் யாவரும் சமமே என்ற நிலை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. ஆங்கில மொழியானது மக்களை ஒன்றிணைத்தது. கிராமங்களுள் பலருக்கு ஆங்கிலம் தெரியா விட்டாலும் கிராமத்தில், படித்த ஆங்கிலம் தெரிந்த ஒருவரிடம் இருந்து ஆவணங்களின் உள்ளடக்கங்;களை கிராமத்தவர் அறிந்து கொண்டார்கள். தெற்;கில் வாழ்ந்த தமிழர்கள் பலர் சிங்களம் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். வடக்கில் வாழ்ந்த சிங்களவர்கள் தமிழ் மொழியைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். நான் சிறுவனாய் இருந்த போது எங்களுக்குப் பாண், பணிஸ் ஆகியன கொண்டுவரும் சிங்களப் பாண்காரர் எங்களுடன் நன்றாகத் தமிழில் பேசுவார். அதுவும் யாழ்ப்பாணத் தமிழில் பேசுவார்.


கொழும்பில் இருந்து என் தகப்பனார் வேலை செய்த சிங்கள பெரும்பான்மையினர் வசிக்கும் நகரங்களுக்கு நாங்கள் போகும் போது சிங்கள சகோதரர்களுடன் சிங்களத்தில் பேசுவோம். நாம் யாவரும் இலங்கையர் என்ற ஒரு எண்ணம் அப்பொழுது எல்லோரிடமும் இருந்தது. தற்போது ரி~p சுனக் தன்னை பிரித்தானியர் என்று அடையாளம் காட்டுவது போல் என் கல்லூரியில் படித்த தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், மலேயர்கள், இந்திய வம்சா வழியினர், சீனர்கள் எல்லோரும் தம்மை இலங்கையர் என்றே அடையாளம் காட்டிக் கொண்டனர். நாம் யாவரும் மனதார அவ்வாறே உணர்ந்து கொண்டோம். பெருமையும் கொண்டிருந்தோம்;. “சிங்களம் மட்டும்” சட்டம் வந்தவுடன் இந்த அந்நியோன்னியம் நீங்கியது. “நாம்” என்று பன்மையில் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தவர்கள் இப்பொழுது “நான் சிங்களவன்” “நீ தமிழன்” “நீ முஸ்லீம்” “ நீ மலேயன்” “ நீ சீனாக்காரன்” என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். 


இன்று சிங்களவர்கள் பலர் கேட்கும் கேள்வி ஆங்கிலம் இருந்த இடத்தில் பெரும்பான்மை மொழியான சிங்களம் அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிங்களம் எம் உள்;ர் மொழி. முன்னர் போல் நாம் ஏன் இலங்கையர் என்று எம்மை அடையாளங் காட்ட மறுக்கின்றோம் என்பது. வடகிழக்கில் தமிழ்தான் பெரும்பான்மை மொழி; அங்கு ஏன் சிங்களத்தைத் திணிக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. 


நாங்கள் சேர்ந்து ஒரு இடத்திற்குச் செல்கின்றோம். அங்கு வாழ்பவர் பெரும்பான்மை தமிழர்கள். அங்கு சென்றதும் நாம் தமிழில் மட்டும் பேசத் தொடங்குகின்றோம். எம்முடன் வந்த சிங்களவர் எவ்வாறு அதைப் பார்ப்பார்கள்? “அட! என் தமிழ் நண்பர் மாறிவிட்டாரே! என்னுடன் இப்பொழுது தமிழில் மட்டும் பேசுகின்றாரே” என்று மனவருத்தமடைய மாட்டாரா? ஏற்கனவே நாம் யாவரும் ஆங்கிலத்தில் உறவாடி வந்தோம். இப்பொழுது தமிழைத் திணித்தால் சகோதரர் றோஹித அபேகுணவர்த்தன அதனை எவ்வாறு நோக்குவார்? இதனால்த்தான் சிங்கப்பூர் நான்கு மொழிகளுக்கு அரசியல் அந்தஸ்து வழங்கியது. சீன மொழி, மலாய் மொழி, தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் சிங்கப்பூரில் உத்தியோக பூர்வ மொழிகள். அதனால் எந்த சிங்கப்பூர் குடிமகனும் தன்னை நாடு ஒதுக்கி விட்டுள்ளது என்று நினைக்க வாய்ப்பில்லை. தான் இரண்டாந்தரக் குடிமகன் என்று நினைக்கவும் வாய்ப்பில்லை.


இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதுமல்லாமல் நாட்டில் பரவலாக வாழ்ந்த தமிழ் மக்கள் கலகங்கள், காணி அபகரிப்பு, அரசாங்க தனி மொழிச்சட்டம் போன்ற பலவற்றின் காரணமாக சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இருந்து படிப்படியாக விரட்டி அடிக்கப்பட்டு தற்போது வடகிழக்கில் மட்டும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


கொழும்பு தலைநகரம். அங்கு தமிழ் பேசுவோருக்கு ஒரு இடமிருப்பது இன ரீதியாகச் சிந்திக்கும் சிங்களவர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. எனினும் 1958, 1983 ஆகிய வருடங்களில் தமிழரைப் பெரும்பாலும் கொழும்பிலிருந்து விரட்டவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். எனினும் சிங்களப் பெரும்பான்மையோரைக் கொண்ட கொழும்பு அல்லாத இடங்களில் தமிழரை இதுவரையில் விரட்டி அடித்து விட்டார்கள். அநுராதபுரத்தில் திரு. நடராஜா என்ற தமிழர் ஒருவரே தொடர்ந்து 17 வருடங்கள் நகர சபைத் தலைவராக என் இளம் பிராய வயதின் போது இருந்தார். அப்போது அநுராதபுரத்தில் பல தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் 95மூ சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கிருந்து பல அரச செய்கைகளினால் விரட்டப்பட்டுள்ளனர். 


சிங்களப் பிரதேசங்களில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு பலர் அகதிகளாக வெளிநாடுகள் சென்று விட்டனர். சிலர் தமது பூர்வீக வடகிழக்கு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பலரை இங்கும் இருக்க விடாமல் போரின் போது விரட்டி அடித்தன சிங்கள அரசாங்கங்கள். இன்றும் வடகிழக்கில் பெருவாரியாகப் படையினர் நிலை கொண்டிருக்கின்றனர். எமது காணிகள் அவர்கள் வசம். பயிரிட்டு பயன் பெறுகின்றனர். எமது வியாபாரங்கள் அவர்கள் வசம். சுற்றுலாப் பயணிகளுக்கு உணவகங்கள் ஒரு புறம். யு9 வீதியில் ஆங்காங்கே படையினர் அல்லது பொலிசாரின் அனுசரணையுடன் தேனீர் கடைகள் மறுபுறம்.


பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. தமிழர்களின் மக்கட் தொகையைக் குறைக்கும் வண்ணம் நில ஆக்கிரமிப்புக்களும் சிங்களக் குடியேற்றமும் நடைபெறுகின்றன.


எமது மீனவர்களை தமது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன் பிடிக்க விடாமல் தடுத்து தெற்கிலிருந்து வரும் மீனவர்களுக்கு மீன் பிடிக்க விட்டிருக்கின்றனர் படையினர். பல இடங்களில் அவர்கள் சட்டத்திற்கு மாறான முறையில் மீன் பிடித்து தெற்கிற்கு அனுப்புகின்றனர். வருமானத்தை தாம் எடுக்கின்றனர். எமது மீனவர்கள் பல விதத்திலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரம் அற்று வாழ்ந்து வருகின்றனர். தமது பாரம்பரிய வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.


கடற்கரையோரக் காணிகள் தமக்கு வேண்டும் என்று கூறி சிங்கள மாகாணங்களிலிருந்து தமிழ் மாகாணங்களுக்குள் ஊடுறுவி வடகிழக்கு தமிழர்களின் தாயகத்தைப் பிரித்து எமது தொடர் இருப்பை இல்லாதாக்குவதற்கு அரசாங்கங்களாவன, புத்த பிக்குகள் மேலும் படையினரின் உதவியுடன் அரும்பாடுபட்டு வருகின்றன. 


காணி அபகரிப்புக்கள் அரச உதவியுடன் திணைக்களங்களினாலும் மகாவெலி சபை போன்றவற்றாலும் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

வைத்தியசாலைகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. மருந்துகள் இல்லை.


எமது கல்வித்தரம் நாட்டின் மாகாணங்களுக்குள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. முன்னர் முன்னணியில் நின்றோம். இப்பொழுது கடைசி நிலையில் நிற்கின்றோம்.


மாகாண சபைகளை இயங்க விடாது எம்மை மத்திய சிங்கள அரசாங்கமே ஆண்டுகொண்டிருக்கின்றது. நாட்டின் மற்றைய பாகங்கள் யாவும் நவீன நிலையை அடைந்திருக்கும் நிலையில் தமிழர் வாழ் பிரதேசங்கள் முன்னேற்றத்தைக் காணவிடாமல் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளன.


முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு விடயங்கள். பொருளாதார மந்த நிலைப்பாட்டின் காரணமாக நாட்டின் மற்றைய இடங்களில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு மேலதிகமாக நாம் எமது பாரம்பரிய காணிகளை இழந்து கொண்டிருக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முதலில் கொழும்பில் இருந்தும் மற்றைய மாகாணங்களில் இருந்தும் தமிழர்கள் விரட்டப்பட்டார்கள். இன்று வடகிழக்கில் இருந்தும் அவர்களை விரட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே படிப்படியாகத் தமிழர்களை இந்த நாட்டை விட்டு விரட்டவும் அவர்களை அடிமைகளாக்கவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


இப்பொழுது தமிழர் இடங்களில் சிங்களவர்களை வாழவிடுகின்றார்கள் இல்லை என்று றோகித போன்றவர்கள் அங்கலாய்க்கின்றனர். முன்னர் சிங்களவர் வாழ் இடங்களில் இருந்து தமிழர்களை விரட்டாது இருந்திருந்தார்களேயானால் இவ்வாறு கூறலாம். எம்மை அங்கிருந்து விரட்டி விட்டு எவ்வாறு நாம் வாழும் வீட்டிற்கு வந்து எமது வீட்டினுள் நுழைய முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் றோகித போன்றவர்கள். றோகித அபேகுணவர்த்தன தமிழர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கின்றார். சுருக்கமாக எமது பிரச்சனைகளைப் பட்டியலிட்டு கூறுகின்றேன்.


1. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்கள் இப்பொழுது வட கிழக்கு மாகாணங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுகின்றார்கள். 

2. பெருவாரியான படையினர் எம்மை மெய்நிகராகச் சிறைப்படுத்தி வைத்துள்ளார்கள். காணிகள், விவசாய நிலங்கள், வணிக நிலையங்கள், சுற்றுலா மையங்கள் அவர்கள் வசம் அல்லது அவர்கள் மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றன. எமது சுதந்திரம் பறி போய் விட்டது. எமது பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

3. தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை

4. போதைப் பொருள் பாவனையை வடகிழக்கில் இங்கிருந்து மர்மக்கரங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

5. தமிழர்கள் பொருளாதார விருத்தி அடைய அரசாங்கமே முட்டுக்கட்டையாக விளங்குகின்றது.

6. மருத்துவ வசதிகள் வெகுவாகக் குறைந்த நிலையிலேயே எமது மருத்துவர்கள் இங்கு கடமையாற்றி வருகின்றார்கள்.

7. கல்வி நிலை தேக்கமுற்று இருக்கின்றது.

8. மாகாணசபை இயங்காததால் மாகாணக் கல்வி நிலையங்கள் போன்றவை மேற்பார்வை அற்று இயங்குகின்றன.

9. உள்நாட்டு மீனவர்களின் வேலைகளை வெளியில் இருந்து வந்தவர்கள் ஆக்ரமித்துள்ளார்கள்.  

10. எமது உற்பத்திப் பொருட்கள் சந்தைப் படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.

11. வெளிநாட்டு முதலீடுகள் இங்கு வருவதை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தித் தம் வசம் வைத்திருக்க முயலுகின்றது.

12. சீனர்களின் நிலைப்பாடு இங்கு பெருக அரசாங்கம் வழி செய்து கொடுக்கின்றது. இது வருங்காலத்தில் எம்மைப் பாதிக்கப் போகின்றது.

13. உரம் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தால் உற்பத்தி விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.

14. வேலை வாய்ப்பு இல்லாததாலும் பொருட்களின் விலையேற்றத்தாலும் இளைஞர்கள் யுவதிகளால் குற்றங்கள் பல புரியப்படுகின்றன. அவற்றை இங்கு குடி கொண்டிருக்கும் பெரும்பான்மை சிங்களப் பொலிசார் எந்தளவுக்குத் தடுக்கின்றார்கள் என்பதில் சந்தேகமே உருவாகியுள்ளது. அவர்கள் பிள்ளைகளையுங் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

15. போக்குவரத்துப் பாதைகள் சீர் பண்ணப்படாது மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன.

16. பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காது அதிகரிக்க மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது.

17. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ந~;ட ஈடு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.

இவ்வாறு பல பிரச்சனைகளை எமது மக்கள் எதிர் நோக்கும் போது வட கிழக்குத் தமிழர்களுக்கு என்ன பிரச்சனைகள் என்று கேட்பது வியப்பை அளிக்கின்றது.

தமிழர்களுக்கிருக்கும் முக்கிய பிரச்சனை அவர்களைச் சிங்களவர்கள் ஆளுகின்றார்கள் என்பதே. இதற்கு ஒரேயொரு தீர்வு கூட்டுசம~;டி முறையில் நாட்டின் அரசியல் யாப்பைத் தயாரித்து நம்மை நாமே ஆள இடமளிப்பதாகும்.  கிழக்கில் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளை நாம் பேசித்தீர்த்து வைப்போம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   


No comments