இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு: வலது காலில் காயம்!!


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வரிசாபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.  லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வலது காலில் கட்டுடன் சுயநினைவுடன் இருக்கும் இம்ரான் கான் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள், பிடிஐ உறுப்பினர் ஒருவர் முகத்தில் கட்டு மற்றும் அவரது ஆடைகளில் இரத்தத்துடன் இருப்பதைக் காட்டுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

70 வயதான திரு கான், ஏப்ரலில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, உடனடியாகத் தேர்தலை நடத்தக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.

தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments