அதிகாரப்பகிர்வு பேச்சுவார்த்தை என்பது அதிகார ஆட்சிச் சவாரிக்கான ஆரம்பமா? பனங்காட்டான்


அதிகாரப்பகிர்வு என்ற பெயரில் என்ன நடைபெறுகிறது? பேச்சுவார்த்தை, உடன்பாடு, சம்மதம், தீர்வு என்று கூறிக்கொண்டு அனைத்தையும் ராணுவ நடவடிக்கையால் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் திட்டமா? முறிந்துபோன கதிரையில் அமர்த்தப்பட்டிருக்கும் ரணில், முன்னர் பலர் ஏறி விழுத்த குதிரையில் தாமும் ஏறி அதிகாரப்பகிர்வு என்ற பெயரில் அதிகாரச் சவாரி செய்ய ரெடியாகிராறா?

கார்த்திகை மாவீரர் மாதம். கார்த்திகைப் பூ மாவீரர் பூ. அவர்களின் வணக்கத்துக்குரிய பூ. 

வன்னியின் அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் சூழ்ந்து நிற்கையில், 1989 நவம்பர் 27ம் நாளன்று மாவீரர் நாள் பிரகடனமானது. 

கடந்த 34 ஆண்டுகளுக்கிடையில் எத்தனையோ போராட்டங்களையும் பிரளயங்களையும் தமிழ் மக்கள் கண்டுள்ளனர். 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் உறைநிலை கண்டதாயினும், தமிழரின் நீண்டகால அபிலாசைகளுக்கான அரசியல் போராட்டம் தொடர்கிறது. அதற்குப் பலம் சேர்க்கும் வகையில் உலகளாவிய ரீதியில் மாவீரர் நாள் நினைவெழுச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

எதிர்கொள்ளாமல் எதனையும் அடைய முடியாது என்ற சிந்தனைக் கோட்பாடே தமிழினத்தை நின்று வழிகாட்டுவது. பிறப்பால் கிடைத்ததை இழக்காது காப்பதற்காகவே போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் நீட்சி பெறுகிறது. இதற்கான ஆயுதம், உரிமைக்கான உறுதிப்பாட்டை அச்சமின்றி வெளிப்படுத்துவதுதான். 

உறுதியின் உறைவிடமாக வாழும் மாவீரர்களை நெஞ்சிருத்தி இன்றைய பத்திக்குள் எழுதுகோலைப் பதிப்போம். 

மாவீரர்களுக்கு உரித்தான கார்த்திகை மாதத்தில் மீண்டுமொரு தடவை இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை முளைவிடுகிறது. 2002ல் பிரதமராக இருந்தபோது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து, மாபெரும் போராட்ட அமைப்பை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்க, இப்போது ஜனாதிபதி என்ற ஆசனத்தில் அமர்ந்தவாறு பேச்சுவார்த்தைக்கு கடை விரித்துள்ளார். 

2015ல் உருவான நல்லாட்சி அரசில் தங்கள் கூட்டாளிகளாகவிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எவ்வகையாவது தனது வலைக்குள் வீழ்த்தி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட வேண்டுமென்பது ரணிலின் தற்போதைய இலக்கு. 

கடந்த செப்ரம்பரில் ஜெனிவாவில் 51:1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதனை எதிர்கொள்வதிலுள்ள சவால்களையும் சிக்கல்களையும் புரிந்து கொண்ட ரணில் அதிலிருந்து விடுபடுவதற்காகவே பேச்சுவார்த்தையை கையில் எடுத்துள்ளார். 'எமது பிரச்சனைகளை வெளிச்சக்திகளின் தலையீடு இன்றி நாமே பேசித் தீர்த்துக் கொள்வோம்" என்ற சிந்தனை அவருக்குள் உதித்ததற்கு காரணமே ஜெனிவாதான். 

'சர்வதேச விசாரணைப் பொறிமுறை, போர்க்குற்றங்களைச் சேகரித்து எதிர்காலத் தேவைகளுக்காக அவற்றைப் பகுத்து ஆவணப்படுத்துதல், போக்குற்றவாளிகள் மீது உலக நாடுகள் தங்களின் சட்டங்களுக்குட்பட்டவாறு நடவடிக்கை எடுத்தல்" என்ற வாசகங்கள் ஜெனிவா தீர்மானத்தில் இடம்பெற்றிருப்பது ரணிலுக்கு சற்று இடைஞ்சலாக இருக்கிறது. 

சர்வதேச நாணய வங்கி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து நிதி உதவி பெற வேண்டுமானால் புரையோடிப்போன உள்நாட்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி எடுப்பதாகவாவது காட்ட வேண்டியது அவருக்கு கட்டாயமாகியுள்ளது. 

இந்தப் பின்னணிகள்தான் ரணில் தீவிரமாக பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணம். இப்போது முன்னெடுக்கப்படும் கருவூலங்கள் பற்றி அணுகுவதாயிருந்தால், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முதல் அத்தியாயமாக 1987 யூலை 29ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ரஜீவ் காந்தியும் செய்து கொண்ட இலங்கை - இ;ந்திய ஒப்பந்தத்தினால் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்துக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிய வேண்டியது கட்டாயம். 

வடக்கு கிழக்குக்கென நிறைவேற்றப்பட்ட 13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமையை சிங்கள தேசமே இதுவரை பூரணமாக அனுபவித்துள்ளது. சிங்கள அரசியல்வாதிகளுக்கு சமுதாய அடிமட்டத்தில் அரசியல் அதிகாரம், ஆட்சிமுறை, நிதி ஒதுக்கீடு என்பவை குறித்து நுகர்வுச் சுவையை இது தாராளமாக வழங்கியது. 2009ன் பின்னர் இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே 2013ல் வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டது. 

கடந்த ஐந்து வருடங்களாக அதுவும் இல்லாதுபோன நிலையில், தற்போது இந்தியாவின் ஒருவகை அழுத்தத்தின் காரணமாகவே ரணில் இனப்பிரச்சனைக்கு ஏதோ செய்ய விரும்புவது போன்று காட்சி கொடுக்க ஆரம்பித்திருப்பது பரகசியம். 

வடக்கு தமிழர் பிரச்சனை பற்றி வடக்கு அரசியல்வாதிகளுடன் பேசப்போவதாக முதலில் அறிவித்தார். இலங்கையின் 75வது சுதந்திர நாளான எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் இதற்கான தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்றார். 

இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னர் எந்தவொரு தேர்தலையும் - மாகாண சபைகள், உள்;ராட்சிச் சபைகள், நாடாளுமன்றம் எனப்படும் எவற்றுக்கும் தேர்தலை நடத்தும் எண்ணம் ரணிலுக்கு இல்லை. மாகாண, உள்;ராட்சிச் சபைகளுக்கு தேர்தல் சட்டங்களை மாற்ற இழுத்தடிக்கும்வரை தேர்தலை பின்தள்ளுவதே இவரது திட்டம். 

சில வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் தேர்தல் ஆணையத் தலைவரை சந்தித்து எக்காரணம் கொண்டும் இந்தத் தேர்தல்களை பின்போடக் கூடாதென கேட்டுக் கொண்டனர். அப்படியான திட்டம் எதுவும் இல்லையென்று பதிலளித்த ஆணையாளர், ஏதாவது காரணத்தை முன்வைத்து தேர்தலைப் பின்போட நாடாளுமன்றம் முடிவெடுத்தால், தேர்தலை பின்போட வேண்டி வரும் என்று கூறியுள்ளார். நீங்கள்தான் நாடாளுமன்றத்தில் அவ்வாறு முடிவெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆணையாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். 

ஒருபுறம் காரியங்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், இனப்பிரச்சனை தீர்வு முயற்சியில் தாம் தீவிரமாக இருப்பதுபோல் ரணில் காட்டிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தும் எண்ணம் தமக்குக் கிடையாது என்றும் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன்தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பது இங்கு மறைபொருளாகக் காட்டப்படுகிறது. 

பேச்சுவார்த்தை என்பதில் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது அல்லது காட்டப்படுவது, தமிழ்க் கட்சிகள் - குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுவே. இதுதான் இங்குள்ள சிக்கலான விடயமும்கூட. 

1972ல் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டபோது அப்போதைய தமிழ்த் தலைவர்கள் ஒரே மேடையில் கூடியது போன்ற நிலைமை நிரந்தரமாக தொடரவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் பின்னணியில் நின்று உருவாக்கிய வேளை, அவர்களின் அதிகூடிய வலிமை காரணமாக அனைவரும் ஒரே அணியில் இணைந்தனர். ஆனால் 2009க்குப் பின்னர் அந்த நிலைமை இல்லாமல் போய்விட்டது. 

இப்போது தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மூன்று அணிகள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன. அதில் முக்கியமானதாக பத்து உறுப்பினர்களுடன் உள்ள கூட்டமைப்பு பல கூறுகளாக பிளவுபட்டுள்ளது. அதேசமயம் சமஷ்டி என்ற ஒற்றை அம்சத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றுக்குள்ளும் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. இந்த அடிப்படையில் இவர்களின் குரல் ஒன்றாக அமையலாமென தமிழ் மக்கள் நம்பக்கூடும். 

இது தொடர்பாக சம்பந்தன் தலைமையில் கூடிய நாடாளுமன்றக் குழு, வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டியை வலியுறுத்துவதென முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனோடு இணைந்ததாக சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ரணில் நடத்திய ஓரங்க நாடகம் இன்றைய அரசியலில் விசித்திரமானது. 

ஓட்டப் போட்டி ஒன்றின்போது நடுவராக இருப்பவர் போட்டியாளர்களை ஒவ்வொருவராகப் பார்த்து 'நீங்கள் ரெடியா" (நீங்கள் தயாரா) என்று கேட்பது போன்ற பாணியில், அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைக்கு ஒவ்வொரு கட்சியினரிடமும் சம்மதம் கேட்டார். 

சஜித் பிரேமதாச அணியினர் தாங்கள் எப்போதுமே அதிகாரப் பகிர்வுக்கு தயார் என்றனர். பொதுஜன பெரமுனவின் சார்பில் பதிலளித்த மகிந்த ராஜபக்ச தமது தலை அசைவால் சம்மதத்தைக் காட்டினாலும் பின்னர் உடன்படுவதாக வாயால் பதிலளித்தார். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட வேளையில் இரண்டு பிரதான கட்சிகள் நடந்து கொண்ட விதம் இப்போது நினைவுக்கு உட்படுத்த வேண்டியது முக்கியம். அப்போது பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச இந்த ஒப்பந்தத்தை பகிரங்கமாக எதிர்த்ததோடு அதிகாரப் பகிர்வை வன்மையாகக் கண்டித்தார். ராஜீவ் காந்தி கொழும்பில் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டபோது அவர் மீது தாக்குதல் நடத்த முனைந்த கடற்படைச் சிப்பாயை அடுத்த பொதுத்தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக்கி நன்றிப் பரிசையும் வழங்கினார். 

ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது ஜே.வி.பியினர் நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தி வன்செயல்களைத் தூண்டிவிட்டு கொலைகளையும் கொள்ளைகளையும் மேற்கொண்டனர். அன்றைய பிரதமர் பிரேமதாசவின் புதல்வரான இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும், ஜே.வி.பியினரும் இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்பதால் திரிகரண சுத்தியாக அதிகார பகிர்வு அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கு எவ்வகையில் பங்களிப்பார்கள் என்பதை இப்போது அளவிட முடியாது. 

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ரணிலின் வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது கூட்டமைப்பு இதனைப் புறக்கணித்தது. இதன் பின்னர் இதுபற்றி விளக்கம் கொடுத்த கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன், ரணிலின் பேச்சுவார்த்தை நல்லெண்ண முயற்சிக்கான சமிக்ஞையாகவே தாங்கள் வாக்களிப்பை புறக்கணித்ததாக விளக்கமளித்தார். புறக்கணிப்பு என்பது பகிஸ்கரிப்புத்தான். ஆனால் சுமந்திரன் வழக்கம்போல தலையைச் சுற்றும் பாணியில் விளக்கம் கொடுத்தது புதுமையான அரசியல் விண்ணாணம். இப்படித்தான் நாடகங்கள் தொடருமானால் ரணிலின் பேச்சுவார்த்தை முளைப்பதற்கு முன்னரே காணாமலானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. 

ரணிலும் சும்மா இருக்கவில்லை. மீண்டும் போராட்டத்தின் மூலம் அரசை வீழ்த்த எவராவது முயன்றால் ராணுவத்தைக் களமிறக்குவேன், அவசரகால சட்டம் பிரகடனமாகும் என்று ஜே.ஆர். பாணியில் அச்சுறுத்தும் பிரகடனங்களைச் செய்துள்ளார். 

உண்மையிலேயே என்ன நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை, உடன்பாடு, சம்மதம், தீர்வு என்று கூறிக்கொண்டு அனைத்தையும் ராணுவ நடவடிக்கையால் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் திட்டமா?

முறிந்துபோன கதிரையில் அமர்த்தப்பட்டிருக்கும் ரணில், முன்னர் பலர் ஏறி விழுத்த குதிரையில் தாமும் ஏறி அதிகாரப்பகிர்வு என்ற பெயரில் அதிகாரச் சவாரி செய்ய ரெடியாகிராறா? அதற்குத்தானா பேச்சுவார்த்தை என்ற நாடகம்?

No comments