ஐரோப்பா ரீதியில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில்  நடாத்தப்படும்

தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது  இன்று ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 

10 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம், நட்டுவாங்கத் தேர்வு வரை நடாத்தப்பெற்ற இத்தேர்வில் நடனம் - பரதம், இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, சுரத்தட்டு), மிருதங்கம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பலநூறு மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். 

பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம், ஜேர்மன் பாரதி கலைக்கூடம், டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக் கூடம், நோர்வே அன்னை பூபதி, தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஆகிய கல்வி நிறுவனங்களின் முழுமையான ஆதரவுகளுடன் நாடுகள் நிலையில் தேர்வுகளிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தேர்வு நடுவர்களாக ஆற்றுகைத்தரத்தினை நிறைவுசெய்த வளர்ந்துவரும் இளம் தமிழ்க்கலை ஆசிரியர்கள், முதுநிலை தமிழ்க்கலை ஆசிரியர்கள், நாடுகள் நிலை ஒருங்கிணைப்பாளர்கள், கல்விப்பணியக பொறுப்பாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கடமையாற்றியிருந்தார்கள். 

தேர்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அறிமுறைத் தேர்விற்குத் தோற்றிய மாணவர்களிற்கான செய்முறைத்தேர்வுகள் இம்மாத இறுதிப்பகுதியில் இருந்து 2023 ஆம் ஆண்டு மேமாதம் வரை நாடுகள் நிலையில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

2020, 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்தரத் தேர்விற்கு தோற்றி அறிமுறை, செய்முறைத் தேர்வுகளில் சித்தியடைந்த சுவிஸ் நாட்டு மாணவர்களிற்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வுகள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு தைமாதம் 4, 5, 6, 7, 8 ஆகிய திகதிகளில் சூரிச் மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றன. 

இத் தேர்வில்  நடனத்துறையைச் சேர்ந்த 14 மாணவர்களும் இசைத்துறையைச் சேர்ந்த 9 மாணவர்களும் வாத்தியத் துறையைச் சேர்ந்த 10 மாணவர்களும் தோற்ற இருக்கின்றார்கள். 

பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களிற்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஆற்றுகைத்தேர்வில் சித்தியடைந்து தேர்வு விதிமுறைக்கு அமைவாக துணைப் பாடத்திலும் சித்திடைந்திருக்கும் மாணவர்களிற்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பெறும் பட்டமளிப்பு நிகழ்வில் துறைசார் பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்படும்.

தமிழ்க்கலையினை ஆர்வத்துடன் கற்று தேர்விற்குத் தோற்றிய, தோற்ற இருக்கின்ற மாணவர்கள் அனைவரிற்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது. 

நன்றி.

நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.
09.10.2022

No comments