உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும் - டென்மார்க் மகளிர் அமைப்பு


உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது. இதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றதே தமிழீழப்பெண்களின் எழுச்சி.

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி எமது மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது வீராங்கனைகள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களிலே உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடையையும் புரிந்து சென்ற போராளிகளிலே முதல் பெண்போராளியாக வீரகாவியம்  படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கொள்கிறோம்.

அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளார்கள்.

சாத்வீக வழிநின்ற சரித்திரத்தில் தியாகத்தின் செம்மலாய் அன்னை பூபதியின் வழித்தடங்கள்  

தமிழீழப் பெண்களுக்கு இன்னுமோர் மாபெரும் அத்தியாயத்தை எழுதி சென்றிருக்கின்றது.

எமது இனத்தின் அரசியல் விடிவிற்காகவும், இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தி உயிர் தியாகம் செய்த உலகின் முதற் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் அன்னை பூபதி. அவரது பெருமையை போற்றுவதுடன் மட்டும் எமது கடமை முடிந்து விடக்கூடாது.

நீண்ட கால ஆக்கிரமிப்புக்கும், கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து, அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்து, தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

தமிழீழத்தில் பெண்கள், யுவதிகள் மற்றும் சிறுமிகள் மீதான வன்புணர்வு படுகொலைகள் பல நன்கு திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிங்கள படைகளாலும், இந்தியப்படைகளாலும் மிக மோசமாக தமிழீழப் பெண்கள் பாதிக்கப்பட்டனர். இவற்றுக்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவில்லை என்பது மிகவும் பெரும் வேதனையாக உள்ளது.

2009ம் ஆண்டு ஆயுத யுத்தம் மௌனித்தது, அதன் பின் பாதுகாப்பு என்ற போர்வையில் சிங்கள இராணுவம் சூழ்ந்திருக்க, கட்டிக்காத்த எம்மின அடையாளங்கள் சீரழிக்கப்படுகின்றன. கலாச்சார சீர்கேடுகள் தோற்றம் பெற்று அதற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன. பிஞ்சுகள் முகத்தில் போதையின் வடிவம், வீதிக்கு வீதி மதுக்கடைகள், மறைமுகப் போதைப் பொருள் விற்பனை, பிள்ளைகள் சீரழிப்பு இவ்வாறு பல வடிவங்களில் இந்தச் சீரழிப்பு இடம்பெறுகின்றது.

அங்கே வாழும் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாத  துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். இன்று ஒரு பெண் பிள்ளை தெருவில் தனியாக நடந்து செல்ல முடியாத ஒரு நிலை  தமிழீழத்தில் உருவாகியுள்ளது.  இதனால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய மனங்களிலும் எங்களைக் கட்டி காத்து, பாதுகாப்பு தந்தவர்கள், எப்பொழுது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

தமது உரிமைக்கான குரலை இழந்து, பலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண் குலத்தின் விடுதலைக்காக, அவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்திற்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். 2009ம் ஆண்டு மே மாதத்துடன் எமது மக்கள் சுவாசித்த சுதந்திரக்காற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. அந்த சுதந்திரக்காற்றை எமது மக்கள் மீண்டும் சுவாசிக்க வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் அயராது உழைக்க வேண்டும்.

நன்றி

மகளிர் அமைப்பு டென்மார்க்

“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”


No comments