கிரிமியாவில் ரஷ்ய கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்தியது


ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, உக்ரைனில் இருந்து முக்கிய தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள செவாஸ்டோபோல் அருகே கருங்கடல் கடற்படையை உக்ரைன் நேற்று சனிக்கிழமை அதிகாலை 16 ட்ரோன்களுடன் தாக்கியது என்றும், பிரிட்டிஷ் கடற்படை நிபுணர்கள் இந்தப் பயங்கரவாத தாக்குதலை ஒருங்கிணைக்க உதவியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.  இக்குற்றச்சாட்டை பிரித்தானியா உடனடியாக நிராகரித்தது.

சமீபத்திய மாதங்களில் பல முறை குறிவைக்கப்பட்ட செவாஸ்டோபோல், கடற்படையின் தலைமையகமாகவும், உக்ரைனில் செயல்படுவதற்கான இராணு தளவாட மையமாகவும் செயல்படுகிறது.

நேற்று சனிக்கிழமை அதிகாலை துறைமுகத்தின் மீதான தாக்குதலில் ஒன்பது வான்வழி ஆளில்லா விமானங்களையும் ஏழு கடல்சார் விமானங்களையும் அழித்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் கூறியது.

பிரித்தானிய நிபுணர்கள் தெற்கு உக்ரேனிய நகரமான ஓச்சாகிவ்வை தளமாகக் கொண்டதாகவும் தாக்குதலை நடத்துவதற்கு அவர்களே பயிற்சிகளை கொடுத்து அளித்ததாகவும் ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

முக்கிய தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்தும் முடிவைத் திரும்பப்பெறுமாறு இன்று ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை வலியுறுத்தியது. அதன் கப்பற்படை மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் நடத்திய பெரிய தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இந்த இடைநிறுத்தம் உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான உக்ரைனிலிருந்து ஏற்றுமதிகளைக் குறைக்கும், மேலும் மொஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பால் தூண்டப்பட்ட உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளுக்கு அடியாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments