பயங்கரவாதத் தடைச் சட்டம் வேண்டாம்!



பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளமை என்பது கவலைக்குரிய விடயம் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட டிவனியா தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டு 17 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட டிவனியா,யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் என்றால் அவர்களின் வாழ்க்கை இருண்டதாகவே காணப்படுகிறது. ஏனென்றால் கைது செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியாது,வழக்கு எப்போது என்றும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தனிப்பட்ட இலாபங்களுக்காக இவ்வாறு சிறையில் மாட்டிக் கொள்ளவில்லை. பொது நோக்கு ஒன்றுக்காக செயற்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இப்படி சிறையில் தவிக்கின்றனர்.


தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்தேன் என்ற அடிப்படையில் என்னை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். ஆகவே இப்போது பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமாக மாறியுள்ளது. இவை தேசிய பாதுகாப்புக்கு போதுமான சட்டம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் இந்த பயங்கரமான பயங்கரவாதச் சட்டம் நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயம்.


ஆகவே இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று ஒன்றை கண் துடைப்பாக கொண்டு வருகிறார்கள்.இதன் பாதிப்பு தொடர்பில் அனைவரும் இப்போது பரவலாக பேசி வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் சட்டங்கள் எதுவுமே செய்யாத அப்பாவிகள் மீது திணிக்கப்படுகிறது.இதனால் தான் நானும் சிறைவாசம் அனுபவித்தேன். எனது தந்தையின் மரணச் சடங்குக்கு கூட என்னால் செல்ல முடியவில்லை,அப்பாவை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

No comments