ஜெனிவாவின் 51:1 இலக்கத் தீர்மானமும் கோதா நாடு திரும்ப அவசரப்படுவதும்! பனங்காட்டான்


கிறீன் கார்ட் விண்ணப்ப தகுதியின்மைஇ அமெரிக்காவில் எதிர்நோக்கப்படும் இரண்டு வழக்குகள்இ ஜனாதிபதிக்குரிய சலுகைகளும் வசதிகளும் நிராகரிக்கப்படக்கூடிய சூழ்நிலைஇ ஜெனிவாவில் நிறைவேற்றப்படவிருக்கும் 51:1 இலக்கத் தீர்மானம் ஆகியவைகளை கூட்டிக் கழித்துப் பார்த்தால் கோதபாய அவசரம் அவசரமாக நாடு திரும்ப முனைவதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாம். இதனைப் புரிந்துகொள்ள அரசியல் விஞ்ஞானம் தேவையில்லை. 

'ராஜாதிராஜ ராஜமார்த்தாண்டஇ வீராதிவீர வீரமார்த்தாண்டஇ சூராதிசூர சூரமார்த்தாண்ட சுண்டெலிக்குப் பயந்த மாமன்னர் வருகிறார்....பராக்! பராக்!...."

நான் சிறுவயதில் பார்த்த நாடகமொன்றின் மன்னர் நாடு வருகைக் காட்சிஇ கடந்த சில நாட்களாக எனக்குள் வந்து என் மனசை அலைக்கழிக்கிறது. 

இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் இரத்தினத் துவீபம் என்றும் வர்ணிக்கப்படுவது இலங்கைத் தீவு. ராணுவ ரீதியாக சுமார் இரண்டு தசாப்தங்களும்இ அரசாட்சி நிர்வாக ரீதியாக இரண்டு வருடமும் சில மாதங்களும் இத்தீவைக் கட்டியாண்டவர் கோதபாய ராஜபக்ச. 

எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடிய இவர் நாடு திரும்பப் போவதாக நடத்தப்படும் நாடகங்களையும் பீடிகைகளையும் உருவாக்கப்படும் பிம்பங்களையும் பார்க்கும்போது சுண்டெலிகளுக்குப் பயந்து அரண்மனையை விட்டு ஓடிய அந்தக்கால மன்னன் மீண்டும் திரும்பி வருவது போன்ற காட்சி என் மனதுள் விரிகிறது. 

தம்மை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்திய தமது சகோதரர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் பதவி இழக்கச் செய்துஇ அதன் பலனாக தாம் தமது கதிரையில் தொடரலாமென்று நினைத்த கோதாஇ இறுதியில் பின்கதவால் தப்பியோடிஇ நாட்டைவிட்டு வெளியேறிஇ மூன்று நாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டுஇ இனி வேறு வழியில்லை என்ற கட்டத்தில் தமது சொந்த வீட்டுக்கு திரும்பி வருவதை வைத்துஇ அரசியல் செய்ய சிலர் எத்தனிப்பது வேடிக்கையானது. 

ராஜபக்சக்களுக்கு இத்தனை நெருக்கடிகளும் அவலங்களும் நேருவதற்கு முதலில் கதவு திறந்தவர்கள் விமல் வீரவன்சஇ உதய கம்மன்பிலஇ வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவருமே. பசில் ராஜபக்சவுக்கு இவர்கள் இலக்கு வைத்த அம்புஇ சுழிமாறி ஒட்டுமொத்த ராஜபக்சக்களையும் பதம் பார்த்தமைஇ வீரவன்ச கம்பனி எதிர்பார்த்திராதது. 

அதனாற்தான் போலும்இ இப்போது கோதபாயவுக்கு தங்கள் அணியில் இடம் கொடுத்து தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் கொண்டு செல்ல இவர்கள் விரும்புகிறார்கள் போலும். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி ஜனாதிபதியானதை இவர்கள் எவராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. ரணிலை ஆட்சிக் கதிரையில் தொடரவிட்டால் தங்கள் எதிர்கால அரசியல் சூனியமாகி பாலைவனத்துக்குள் தள்ளப்பட்டுவிடுமென இவர்கள் அஞ்சுகிறார்கள். 

இதே பயம் பொதுஜன பெரமுனவுக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது. அதனால் ரணிலை தங்கள் வியூகத்துக்குள் வீழ்த்தி நெருக்கடிகளை உருவாக்க பசில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார். 

கோதபாய செப்ரம்பர் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவது ஓரளவுக்கு நிச்சயமாகி விட்டது. விமான நிலையத்தில் இவரை தடல்புடலாக வரவேற்கவும் பசில் தரப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கிறது. இதற்கு ஏதுவாக இலங்கையின் அரச கட்டமைப்பும் பாதுகாப்புத்துறையும் ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பது போலவும் படம் காட்டப்படுகிறது. இதற்காக கோதபாயவின் பெயரை இவர்கள் எல்லோருமே தாராளமாக பயன்படுத்துகின்றனர். 

முப்படைத் தளபதிகளும்இ பொலிஸ்மா அதிபரும் கோதபாயவினால் அன்று நியமிக்கப்பட்டவர்களே. கோதாவின் வலதுகரமாக யுத்தக்குற்ற இனஅழிப்பில் பெயர் குறிப்பிடப்பட்ட சவேந்திர சில்வா முப்படைகளின் தலைமை அதிகாரியாக இயங்குகிறார். இவரும் கோதபாயவினால் நியமிக்கப்பட்டவரே. இந்த நியமனங்களில் எந்த மாற்றத்தையும் ரணில் உடனடியாகச் செய்ய விரும்பவில்லை. 

கோதபாய ஜனாதிபதி பதவியை இழந்து வெளிநாடுகளில் நாடோடியாக ஓடிக் கொண்டிருந்தாலும் அவரது உத்தரவுகளையே முப்படைகளும் பொலிஸ்மா அதிபரும் நடைமுறைப்படுத்துவதாக கொழும்பு நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இதனை இதுவரை எவரும் மறுக்கவில்லை. 

காலிமுகத் திடல் போராட்டக்கரார்களை தண்டப் பாணியில் தாக்குதல் மூலம் நிர்மூலமாக்கியதற்கு ரணில் உத்தரவிட்டதில்கூட கோதபாயவுக்கு நிறைய பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. 

தாம் தமது வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர் போராட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கையை (கட்டளை) படைத்தளபதிக;டாக கோதா வெற்றிகரமாக நிறைவேற்றினார் என்று பெரமுனக்காரர்கள் அகமகிழக் கூறி வருகின்றனர். 

இத்தனை காரியங்களையும் செய்து முடித்துவிட்டு கோதபாய நிம்மதியாக நாடு திரும்ப முடியுமா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுகிறது. இதற்கான பதிலுக்கு பல தேடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

கிறீன் கார்ட் மூலம் அனுமதி பெற்று அவர் அமெரிக்காவில் குடியேற எடுத்த முயற்சி கைகூடுவது கஸ்டம். இதற்கான விண்ணப்பப் படிவத்திலுள்ள நான்கு கேள்விகளுக்கு இவரால் உண்மையான பதில் வழங்க முடியாது. மனித சித்திரவதைகள்இ சட்டத்துக்குப் புறம்பான கொலைகள்இ அரசியற் கொலைகள்இ வன்முறைச் செயல்கள்இ மத சுதந்திரத்தை மீறிய செயற்பாடுகள் போன்றவைகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா? கட்டளையிட்டுள்ளீர்களா? உதவி செய்துள்ளீர்களா? தூண்டி விட்டீர்களா என்ற கேள்விகளுக்கு இவரால் இல்லை என்று பதிலளிக்க முடியாது. இவ்விடயங்களில் இவர் ஈடுபட்டமை தொடர்பான பல அறிக்கைகள் உள்ளன. மனித உரிமைப் பேரவையிடமும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. 

முக்கியமாக இவரது சகபாடியான சவேந்திர சில்வாவுக்கு போர்க்குற்றம் காரணமாக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதேபோன்று பிரித்தானியா உட்பட வேறு பல நாடுகளிலும் தடை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இது தவிரஇ அமெரிக்காவில் இரண்டு முக்கிய வழக்குகள் உள்ளன. கனடியப் பிரஜையான றோய் சமாதானம் இலங்கை சென்ற வேளையில் கோதபாயவின் உத்தரவின்பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டதுஇ தாக்குதலுக்கு உள்ளானதற்கான வழக்கு முதலாவது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கோதாவை குற்றவாளியாகக் குறிப்பிட்டு தாக்குதல் செய்த வழக்கு இரண்டாவது. 

இந்த இரண்டு வழக்குகளும் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டவை. கோதபாய குற்றவாளியல்ல என வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. வழக்குகள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட காலத்தில் அவர் ஜனாதிபதிப் பதவியில் இருந்தார். அதனால்இ அவர்மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத இம்மியுனிற்றி (ஐஅஅரnவைல) என்ற விடுபாட்டுரிமை (இதனை தடைகாப்பு நிலை என்றும் கூறுவர்) இருந்தமையால் இரு வழக்குகளையும் விசாரிக்க முடியாது என்று கூறியே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதனூடாக வெளிப்படும் அர்த்தமானதுஇ கோதபாய ஜனாதிபதி பதவி இல்லாத காலத்தில் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்பதாகும். இலங்கை அரசியலமைப்பின்படி அவர் இப்போது அந்த விடுபாட்டுரிமையை இழந்து விட்டார். இதனால் அந்த குறிப்பிடப்பட்ட இரண்டு வழக்குகளும் வழக்காளிகள் வேண்டும் நிலையில் விசாரணைக்கு எடுக்கப்படலாம். 

இந்தச் சூழ்நிலையில் கோதபாயமீது பயணத்தடைஇ பிடிவிறாந்துஇ தடுத்து வைத்தல் போன்றவைகள் இடம்பெறுவதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. 

மறுபுறத்தில்இ அடுத்த மாதம் (செப்ரம்பர் 12ம் திகதி) மனித உரிமைகள் பேரவையில் இவ்வருட மூன்றாவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இலங்கையின் இணைஅனுசரணையுடன் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 46:1 இலக்கத் தீர்மானம் காலாவதியாகிறது. அந்தத் தீர்மானத்தை முழுமையாக நிராகரித்த கோதபாய அதன் எந்த அங்கத்தையும் நிறைவேற்ற மறுத்திருந்தார். முக்கியமாக கலப்பு நீதிப் பொறிமுறைஇ பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் என்பவை அவரால் நிராகரிக்கப்பட்டன.  

இதனையிட்டு ஜெனிவா கடும் அதிருப்தி அடைந்தது. பேரவையின் ஆணையாளராக இருந்த கடந்த வாரம் ஓய்வுபெற்ற பச்சிலற் அம்மையார் தமது அறிக்கைகளில் இதனை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். அவருடைய அறிக்கைகளில் மனிதகுல விரோத செயற்பாடுகள்இ மனித உரிமை மீறல்கள்இ மக்கள் காணாமல் ஆக்கப்பட்டமைஇ சட்டத்துக்குப் புறம்பான தடுப்புக் காவல்கள் சுட்டிக்காட்டப்பட்டு வந்தன. 

கோதபாய அரசின் எதிர்ப்பையும் புறக்கணித்து கடந்த கால மற்றும் தொடரும் அரசின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் அலுவலகம் ஒன்றை மனித உரிமைகள் ஆணையகம் உருவாக்கியது. தம்மையும் தமது ராணுவத்தையும் குற்றக்கூண்டில் நிறுத்தவே இது என்பதை கோதபாய நன்கு அறிந்திருந்தார். ஆனால்இ உறுப்புரிமை நாடுகளின் நிதிப்பங்களிப்புடன் இதற்கான செயலகத்தை உருவாக்கி அலுவலர்களை நியமித்த மனித உரிமைகள் ஆணையகம்இ இலங்கையின் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு உறுப்புரிமை நாடுகளிடம் பகிரங்கமாக வேண்டியிருந்தது. 

காலாவதியாகும் 46:1 இலக்கத் தீர்மானத்துக்குப் பதிலாக செப்டம்பர் மாத அமர்வில் 51:1 இலக்கத் தீர்மானம் புதிதாக வரப்போகிறது. இதற்கான முதற்கட்ட வரைபு உருவாக்கப்பட்டு அனுசரணைக் குழுவின் தலைமையான பிரித்தானியாவினால் இணைஅனுசரணை வழங்கும் அமெரிக்காஇ கனடாஇ ஜேர்மனிஇ வடக்கு மசிடோனியாஇ மலாவிஇ மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 

கடந்த வாரம் இலங்கை சென்ற பேரவையின் முக்கியஸ்தரான ரோறி முன்கோவன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றியைச் சந்தித்து பேரவை நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். தயாரிக்கப்பட்ட வரைபின் பிரதியொன்றை செப்டம்பர் பத்தாம் திகதியளவில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இவை எல்லாவற்றுக்கும் அப்பால்இ இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பெரும் குண்டொன்றை திடுதிப்பென வீசியுள்ளார். கோதபாய ஜனாதிபதியாக முழுமையான காலத்துக்கு பதவி வகிக்காது இடைநடுவில் பதவியை துறந்து சென்றதால்இ முன்னாள் ஜனாதிபதிகளுக்குக் கிடைக்கும் சலுகைகளையும் வசதிகளையும் பெற அரசியல் யாப்பின் பிரகாரம் தகுதியற்றவர் என்பது இவரது அறிவிப்பு. பிரச்சனைக்குரிய ஒருவரான சரத் என்.சில்வாவின் பிரச்சனைக்குரிய அரசியல் சட்ட விவகாரம் பல பிரச்சனைகளுக்கு அத்திவாரமாக அமையலாம். 

கிறீன் கார்ட் விண்ணப்ப தகுதியின்மைஇ அமெரிக்காவில் எதிர்நோக்கப்படும் இரண்டு வழக்குகள்இ ஜனாதிபதிக்குரிய சலுகைகளும் வசதிகளும் நிராகரிக்கப்படக்கூடிய சூழ்நிலைஇ ஜெனிவாவில் நிறைவேற்றப்படவிருக்கும் 51:1 இலக்கத் தீர்மானம் ஆகியவைகளை கூட்டிக் கழித்துப் பார்த்தால் கோதபாய அவசரம் அவசரமாக நாடு திரும்ப முனைவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். இதனைப் புரிந்து கொள்ள அரசியல் விஞ்ஞானம் தேவையில்லை. 

No comments