போராட்ட களத்தினுள் சதிகாரர்கள்: பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு உத்தரவு!


இலங்கைக் குடிமக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தி நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக, துணை ஜனாதிபதியான தானும், சபாநாயகரும் தற்போது செயற்பட்டு வருவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சில நபர்களும் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் துணை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நிலைமையை வழமைக்கு கொண்டு வருமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி நேற்றிரவு மாலைதீவு புறப்பட்டுச் சென்றார். அதனை எனக்கும், சபாநாயகருக்கும் அறிவித்தார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். அனைத்துக் கட்சி அரசாங்க அமைத்த பிறகு, வாக்களிப்பு மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும்.

இன்றைய ஆர்பாட்டக்காரர்கள் பல திட்டங்களை வகுத்திருந்தனர். அவற்றை புலனாய்வு அமைப்புகள் மூலம் தெரிந்து கொண்டோம்.

பிரதமர் அலுவலகம், ஜனாதிபதிக்கு விமானம் வழங்கியதால் வான்படை தளபதியின் இல்லம், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளின் இல்லம், நாடாளுமன்றம் என அனைத்தையும் முற்றுகையிட தயாராகி இருந்தனர்.

பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றுவதால் எந்த பயனும் இல்லை, சபாநாயகரின் முடிவினால்தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதை நிறுத்த முடிந்தது.

தற்போது, நான் துணை ஜனாதிபதியாக நியமிகக்பபட்டுள்ளதால் குறித்த இடங்களை கைப்பற்றி நாட்டின் அதிகாரத்தை பலப்படுத்தி, அவர்கள் விரும்பும் ஒருவரை நியமிக்க முயற்சிக்கின்றனர்.

அரசியலமைப்புச் சட்டம் பயனற்றது என்று சிலர் கூறுகிறார்கள். அரசியல் சாசனத்துக்கு புறம்பாக செயல்பட முயற்சிக்கின்றனர். அதனை அனுமதிக்க முடியாது.

அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கவும் மற்றும் அவசரகால நிலையை அமுல்படுத்தவும் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலின்படி  தீர்மானித்துள்ளேன்.

அதற்கமைய, சட்ட ஒழுங்கை நிலை நாட்டில் நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்கு காவல்துறைமா அதிபர், படைகளின் தலைமை அதிகாரி மற்றும் முப்படைகளின் தளபதி அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது உங்கள் குழந்தைகளின், நாட்டு மக்களின் எதிர்காலம். முப்படை மற்றும் காவல்துறைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். சாதாரண மக்களின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும். இந்த பாசிச அச்சுறுத்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.


No comments