ரணில் பதவி விலக வேண்டும் - அமைச்சர் தம்மிக பெரேரா


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். காரணம் அவர் நாட்டை பாரிய அனர்த்தத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றார். டொலரைப் பெறக்கூடிய வேலைத்திட்டங்களை தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பதால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நிதி அமைச்சர் நாட்டை அனர்த்தத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். 

அவரிடம் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் இல்லை. டொலரைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். இதன் பின்னர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. அவரது திட்டமிடலின்மை தொடர்பில் நான் பட்டியலொன்றை தயாரித்திருக்கின்றேன். 

முடிந்தால் எனது இந்த கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு நான் அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். கைகளில் எந்த காகிதங்களும் இன்றி அவருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நான் தயார்.

வெறும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. முறையான திட்டங்களுடன் வீதிக்கு இறங்க வேண்டும். அவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காவிடின் இந்நாடு மேலும் பாரிய பள்ளத்திலேயே வீழ்த்தப்படும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் போது டொலரைப் பெறும் வழிமுறைகள் எழுத்தப்பட்ட பதாதைகளுடன் வருமாறு கோருகின்றேன் என்றார்.

No comments