பொத்துவில்-பொலிகண்டி பேரியக்கம் ஆதரவு!நாளைய தினமான ஞாயிறுக்கிழமை கையலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பொத்துவில்-பொலிகண்டி பேரியக்கம் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் 1996ம் ஆண்டு முதல் 26 வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக வாடிக்கொண்டிருக்கும் திரு விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் அவர்களின் அன்புத்தாய் திருமதி விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அவர்கள் 15.06.2022 சுகவீனம் காரணமாக சாவடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைகின்றோம். தாயார் வாகீஸ்வரி அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளவதுடன் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பார்த்தீபனுடனும் குடும்பத்தினர் அனைவருடனும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.   


தேசத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து சிறைப்படுத்தப்பட்ட தனது அன்பு மகன் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கையுடன்  தொடர்ந்து போராடி வந்த இத்தாயானவர் தனது மகனுக்கு தனது கையால் ஒரு வேளையாவது கூட உணவளிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே  உயிர் பிரிந்தார் என்பது முழு தமிழினத்தையும் ஆழ்த்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


சிறிலங்கா நீதிமன்றத்தினாலேயே மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட தமிழின படுகொலையாளியை  பொது மன்னிப்பளித்து விடுதலை செய்து பதவியுயர்வுகளும் வழங்கும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு அரசானது தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் கூட தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக தடுத்துவைப்பதில் மும்முரமாகவே உள்ளது. தாயார் வாகீஸ்வரி போலவே இன்னும் பல தமிழ் தாய்மார் தமது மகன் அல்லது மகளின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல் அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யவேண்டும். அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  தமது பிள்ளைகளை, கணவரை தேடி போராடி வரும் தாய்மாருக்கும் தமது நிலையை அறிந்து கொள்வதற்கும் அவர்கள்  தமது குடும்பங்களுடன் இணைவதற்க்கும் வழியேற்படுத்தப்பட வேண்டும்.

  

நாட்டில் மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளார்கள் என சர்வதேசத்தில் கையேந்தியுள்ள சிறிலங்கா அரசனது, இக்கடுமையான காலகட்டத்திலும் கூட தமிழர் நிலங்களை சிங்கள பெளத்த மயமாக்குவதிலும், தமிழ் மக்களில் இனப்பரம்பலை மாற்றியமைப்பதிலும், தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்குவதில் ஒரு துளி கூட பின் நிற்கவில்லை என்பதை சர்வதே நாடுகள் விளங்கிக் கொள்ளவேண்டும். தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தமிழர் தாயகம் தழுவிய சர்வசன வாக்கெடுப்பினூடான நிரந்திர அரசியல் தீர்வின் பின்பே உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என இத்தருணத்தில் வலியுறுத்த விரும்புகின்றோம்.


சிறிலங்கா அரசின் உண்மையான கோர முகத்தினை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளினால் கைலாயபிள்ளையார் ஆலய முன்றல், நல்லூரில் 19.06.2022 காலை 10.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்ட போராடத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் முழுமையான ஆதரவு வழங்குவதுடன், இப்போராட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments