உலகில் கூடிய இராணுவத்தை வைத்திருப்பது இலங்கையே!புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், தற்போது 21 வது திருத்தம் தொடர்பில் பேசப்படுகின்றது இந்த 21வது திருத்தம் என்பது 19ஆம் திருத்தத்தின் ஒத்த ஒன்றே. ஆனால் அதனை முழுமையாக 19ஆம் திருத்தத்தின் வடிவம் எனக் கூறமுடியாது. 19வது திருத்தத்தில் உள்ள பல விடயங்கள் 21வது திருத்தத்தில் இல்லை.

 19ம் திருத்தச் சட்டத்தை  கொண்டுவருவதன் ஊடாக மீளவும் நாடாளுமன்றத்திற்கு  அதிகாரங்களை கொடுக்க முடியும் என்பது மாத்திரமல்ல பல விடயங்களை நடைமுறைப்படுத்தலாம். நாடு பொருளாதார ரீதியாக பலமடைய வேண்டுமாக இருந்தால் மாகாணங்கள் விருத்தி அடைய வேண்டும்.

மாகாணசபை ஒழுங்காக இயங்கவில்லை மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாகாணசபை சரியாகச் செலவு செய்யவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இதைப் பற்றி பேச மஹிந்த ராஜபக்ஷ கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நாட்டை மிக மோசமான பாதையில் கொண்டு செல்ல அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு ஏனையவர்களுக்கு ஆட்சியதிகாரம் தெரியாது எனகூற எந்த யோக்கியதையும் கிடையாது.

உலகிலே அதிகளவு எண்ணிக்கையில் இராணுவத்தினரை வைத்திருக்ககூடிய நாடுகளில் 14 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது. இந்த பெரும்படை தேவைதானா? இதற்கு சிங்கள தரப்பினர் யாருமே வாய் திறந்து பேசவில்லை, இந்த நாட்டின் வருமானத்தில் கால் பங்கினை விழுங்கும் இந்த படையினரை யாருக்கு எதிராக போராட வைத்துள்ளீர்கள்.அரசாங்கமே நாட்டினை இந்த நிலைமைக்கு கொண்டு வர காரணம், பெருமளவு இராணுவத்தினரை வைத்திருக்கக்கூடிய அவசியம் இல்லை.

இராணுவத்தைப் படிப்படியாக குறைப்பதற்கு ஏதாவது வழிமுறையை  வைத்திருக்கின்றீர்களா? தற்போது உள்ள இராணுவம் என்ன செய்கிறது முன்பள்ளி நடத்துவது, தமிழ் மக்களின் விவசாய நிலங்களைப் பறிமுதல் செய்து அங்கு விவசாயம் செய்வது, தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளை கட்டுவதையே இராணுவத்தினர் செய்கின்றனர். 


கோட்டாகமவில் போராடக்கூடிய இளைஞர்கள், எதிர்க்கட்சிகள் இடதுசாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதில் கவனம் செலுத்தாவிட்டால் மீண்டும் தவறுகளைச் செய்ய வேண்டியே வரும்.


கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தின் தவறான முடிவுகளும் தவறான கொள்கைகளுமே நாட்டை இந்தளவுக்கு கொண்டுவந்துள்ளது என பிரதமர் கூறுகிறார். நான் பிரதமரிடம் கேட்கிறேன். நீங்கள் திருந்தி விடடீர்களா? வரலாற்றினை கற்றுள்ளீர்களா? கற்றுக்கொள்ளவிட்டால் மீண்டும் மீண்டும் இந்த தவறினை விட போகிறீர்களா?


பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்ட போது நூற்றுக்கணக்கான பரல் எரிவாயு மீட்க்கப்பட்டது. பொது மக்களுக்கு அமைச்சர்கள் பொருட்களை பதுக்கவேண்டாமென ஆலோசனை சொல்கின்றார்களே தவிர தாங்கள் அதனை பின்பற்றுவதாக தெரியவில்லை


21ஆவது திருத்தம் மூலம் நாடாளுமன்றில் இருந்து பறித்த அதிகாரத்தையும் மாகாணங்களிடம் இருந்து பறித்த அதிகாரங்களையும் உள்ளூராட்சி சபையில் இருந்து பறித்த அதிகாரத்தையும் கொடுக்க வேண்டும்.  இது எங்களுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. சிங்கள உள்ளூராட்சி சபைகளும் சிங்கள மாகாணசபைகளும் இதன்மூலம் பயன்பெறும். இன்றைய மோசமான பொருளாதார சூழலில் இது நிச்சயம் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நடத்துவதற்கு காரியத்தை கொடுக்கும்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என்றார்.

No comments