நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உறுதி செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் நாளை (09) சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை மின்சக்தி திருத்தச் சட்டமூலம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (08) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியலாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.


இந்த திருத்தத்தின் மூலம், மின்சார கொள்வனவின் போது, விலைமனுக் கோரல் போன்ற போட்டித்தன்மை இல்லாமல் ஆக்கப்பட்டு, அதற்கு வெளியே மின் உற்பத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் மக்களுக்கு நிவாரண விலையில் மின்சாரத்தை வழங்கும் செயற்றிட்டமும் இதனால் பாதிக்கப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்காவின் நியூ போட்டர்ஸ் நிறுவனத்துக்கு விலைமனு கோரல் இன்றி மின் நிலைய பங்குகள் வழங்கியுள்ள நிலையில், மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின்சாரத் திட்டத்துக்கு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குறைந்த விலையில் காற்றாலை மின்சார அலகொன்றை குறைந்த விலையில் வழங்குவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் உள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து மின் அலகொன்றின் கொள்வனவு விலையை விட அதிக விலையில் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

மின்சார கொள்வனவின் போது போட்டிக்கு புறம்பாக நிறுவனங்களுக்கு மின் திட்டங்களை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளதுடன், தமது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிடின் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் எனவும் சங்கம் தெரிவித்திருந்தது.


இதேவேளை, இது தொடர்பிலான சட்டமூலத்தை பராளுமன்றத்தில் நாளை (09) சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments