ஜனநாயக காட்சிகள் ஊடாக பலமாகும் எதேச்சாதிகார ஆட்சி! பனங்காட்டான்


மக்கள் தன்னெழுச்சியை அடக்கி முறிக்க ஆட்சி பீடம் தன்னைத் தயாராக்கி வருகிறது. இரத்த ஆறு ஓடும் காலம் வருமென்ற அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோவின் எச்சரிக்கை பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னைய நிகழ்வை மனக்கண்முன் கொண்டு வருகிறது. மொட்டு விரியாமலே கருகினாலும் பரவாயில்லை, தாம் பதவி விலகப் போவதில்லையென்ற கோதபாயவின் முடிவு, ராணுவ பலத்துடன் சகல அதிகாரங்களையும் பிரயோகிக்க அவர் தயாராகிறார் என்பதை தெளிவாக்குகிறது. 

இலங்கையின் ஏழு தசாப்தத்துக்கும் மேலான அரசாட்சி வரலாற்றில் இன்று போன்ற மக்கள் தன்னெழுச்சி அல்லது அடிமட்ட அரசியல் கொந்தளிப்பு இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. 

இலங்கை எங்கள் நாடு - எங்களுக்கான நாடு - நாங்கள் ஆட்சி புரியும் நாடு - எங்களின் அரசாங்கம் என்ற ஏகபோக அரசியல் வழியில் தங்களால் அரியாசனம் ஏற்றப்பட்ட தலைவருக்கு எதிராக, அவரைத் தெரிவு செய்த அதே மக்களே அவருக்கு எதிராக வீதிகளில் நின்று தொடர்ந்து போராடுவது இதுவே முதன்முறை. 

இப்படிக் கூறுவதால் சிங்கள அரசாங்கங்களுக்கு எதிராக இதற்கு முன்னர் எதிர்ப்பலை ஏற்படவில்லை என்று அர்த்தமில்லை.

1953ல் அரிசியின் விலையை 25 சதத்தால் கூட்டியதால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை சந்திக்க முடியாத நிலையில், அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க தமக்கு வயிற்றுக்குத்து என்று காரணம் கூறி பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து ஓடினார்.

1959ம் ஆண்டில் இலங்கையின் முதலாவது அரசியல் கொலை கொழும்பில்தான் இடம்பெற்றது. பஞ்சவேகய என்ற ஐந்தரப்பின் பங்களிப்பில் ஆட்சி பீடமேறிய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கொலைச்சம்பவம் அது. இந்தக் கொலையை புரிந்து மரணதண்டனை பெற்றவர் பௌத்த பிக்குவான சோமராம தேரர். 

1971 ஏப்ரல் 5ம் திகதி அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை கொலை செய்து, அல்லது உயிருடன் பிடித்து ஆட்சியை கவிழ்க்க ரோகண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. ஆயுதக்குழு முயற்சித்தது. இந்தியாவின் துணையுடன் அதனை முறியடித்தார் சிறிமாவோ பண்டாரநாயக்க.

இவைகளோடு ஒப்புநோக்கையில் தற்போதைய மக்கள் தன்னெழுச்சி முற்றிலும் வித்தியாசமானது. ஒரு குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற முழக்கத்துடன் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாடு தழுவியதாக, இன மத வர்க்க வேறுபாடின்றி இப்போராட்டம் தொடருகிறது. 

மார்ச் மாதம் 31ம் திகதி கோதபாயவின் தனிப்பட்ட இல்லமான மிரிகான பங்கிரிவத்தையில் - கோதா ஹோ ஹோம் (கோதபாய வீட்டுக்குப் போ) என்ற கோசத்துடன் ஆரம்பித்த போராட்டம் இன்று புற்றுநோய் போன்று வியாபித்து, பிரதமர் பதவி வகிக்கும் மகிந்தவையும் பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகை முன்னாலும் அம்பாந்தோட்டை இல்லத்தின் முன்னாலும்  நடைபெறுகிறது.

அரசசார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அவர்களின் அடிவருடிகள் (உதாரணம் - சோதிடர் ஞானக்கா) மற்றும் முக்கிய அதிகாரிகள் இல்லங்களைத் தேடித்தேடி இரவு பகலாக மக்கள் எழுச்சி கொண்டு போராடுகிறார்கள். இதிலுள்ள சிறப்பம்சம் - அரசியல்வாதிகள் எவரையும் பார்வையாளர்களாகக்கூட மக்கள் அனுமதிக்கவில்லை. பொத்துவில் முதல் பொலிகண்டிவரை தாயகத் தமிழர்களால் நடத்தப்பட்ட பேரணியில் தமிழ் அரசியல்வாதிகள் ஒதுக்கப்பட்டது போலவே இதுவும் காணப்படுகிறது. 

ராஜபக்ச குடும்பத்தின் நான்கு சகோதரர்கள் - ஜனாதிபதி, பிரதமர், இரண்டு அமைச்சர்கள், இக்குடும்பங்களின் இரண்டு புதல்வர்கள் அமைச்சர்கள், இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், தூதுவர்கள் என்று ஒரு பட்டாளம் ஆட்சி நடத்தும் அல்லோகல்லோலம் பகிரங்கமாகியுள்ளது. 

ஆனாலும், எதற்குமே மசியாதவராகவும், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்காதவராகவும் காணப்படும் கோதபாய, அவர்களை ஏமாற்றும் தந்திரோபாயங்களை கையாண்டு வருகிறார். அவற்றுள் சிலவற்றை பின்வரும் காட்சிகளாக நோக்கலாம்: 

தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டாமல், மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பது போன்று அமைச்சர்களை அப்பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். ராஜினாமாக் கடிதங்கள் பிரதமரிடமே ஒப்படைக்கப்பட்டன. அவை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அவர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் இதுவரை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படாமல் பிரதமர் வசமே அவை உள்ளன. அதனால் அமைச்சர்கள் பதவி விலகியதாக சட்டபூர்வமாக சொல்ல முடியாது. 

நிலைமை இப்படியிருக்கையில், நான்கு அமைச்சர்களை மீளவும் கோதபாய நியமனம் செய்தார். இவர்களில் ஒருவராக பசில் ராஜபக்சவின் நிதி அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்றி, பதவியேற்ற அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டார். சிலவேளை பசில் ராஜபக்சவே மீண்டும் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம். 

அடுத்ததாக, காபந்து (இடைக்கால) அரசாங்கம் ஒன்றை அமைக்கப்போவதாக அதிரடியாக அறிவித்த கோதபாய, அதில் தாம் பதவி நீக்கம் செய்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் உட்பட எதிர்கட்சியினரையும் இணையுமாறு அழைப்பு விடுத்தார். வீட்டுக்குப் போ என்று மக்களால் வேண்டப்படும் கோதபாய அதற்குச் செவி சாய்க்காமல் தமது தலைமையிலேயே காபந்து அரசை ஏற்படுத்த முனைந்த நாடகம் பிசுபிசுத்துப் போனது. 

அடுத்து வந்த அறிவிப்பு நம்ப முடியாத விசித்திரமானது. நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை தங்கள் பக்கம் கொண்ட எவராவது நிரூபித்தால் அவர்களிடம் (தமது தலைமையில்) ஆட்சிப் பொறுப்பை வழங்கத் தயார் என்பது. எதிரணிகள் தமக்குள் பிளவுபட்டிருப்பதால் இது சாத்தியமாகாது என தெரிந்து கொண்டு விடுக்கப்பட்ட அறிவிப்பே இது. இதனூடாக தமது பதவியை தொடர்ந்து வைத்திருக்க கோதபாய மேற்கொண்ட யுக்தி தோல்வி கண்டது. 

இதன் பின்னர் அடுத்த கட்ட அறிவிப்பு வந்தது. மக்கள் கோரிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தாம் விடுத்த வேண்டுகோளை எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொள்ளாததால், தாம் முன்னைய நிலைக்குச் செல்லவிருப்பதாக அறிவித்தார். அதாவது, தமது கட்சி சார்ந்த, தம்மை ஆதரிப்பவர்களைக் கொண்ட அமைச்சரவையை மீண்டும் நியமிக்கப் போவதான அறிவித்தல் இது. 

இதனை எழுதும்வரை புதிய அமைச்சரவை நியமிக்கப்படவில்லை. முன்னரிலும் பார்க்க சிறிய அளவான ஓர் அமைச்சரவையை மகிந்த தலைமையில் நியமிக்கவிருப்பதாக அரசாங்க மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேதாளம் மீண்டும் அதே மரத்தில் ஏறும் கதை இது. 

அதேசமயத்தில், கோதபாய எந்தவேளையிலும் ஜனாதிபதி பதவியை துறக்க மாட்டாரென்று அறுதியாகவும் உறுதியாகவும் கூறியுள்ளார் அரசாங்கத் தரப்பு கொறடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ. 

இதற்கு அனுசரணையாக இரண்டு அறிவிப்புகள் முக்கியமான தளங்களிலிருந்து வந்துள்ளது. கொழும்பிலுள்ள ராஜதந்திரிகளைச் சந்தித்து நிகழ்கால நிலைமையை விளக்கிக் கூறிய ராணுவத் தளபதி சவேந்திர சில்வா, நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டதாக ராணுவம் எப்போதும் நடந்துகொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையும் இவ்வாறுதான் ராணுவத்தரப்பு கூறியது ஞாபகம் இருக்கிறது. 

பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன முக்கிய அறிக்கையொன்றை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த மக்களுக்கு உரிமையுண்டு என்று கூறியுள்ள இவர், வன்செயலாக மாறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கோடு காட்டியுள்ளார். 

இந்த அறிவிப்பு வந்த அதே நாளன்று, ஜெயவர்த்தனபுர நாடாளுமன்ற வளவில் மக்கள் பேரெழுச்சி இடம்பெற்றது. அவ்வேளை இலக்கத் தகடற்ற நான்கு மோட்டார் சைக்கிள்களில் ராணுவச் சீருடையில் துப்பாக்கிகள் சகிதம் வந்தவர்களை பொலிசார் மறித்து விசாரித்துவிட்டு திருப்பியனுப்பினர். இதனைக் கண்டித்துள்ள ராணுவத் தளபதி சம்பந்தப்பட்ட பொலிசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுள்ளார். 

எல்லாமே அரசமைப்புக்குட்பட்டுதான் செயற்படுகிறது என்றால், இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் ராணுவம் ஆயுதபாணிகளாக செல்ல வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? இனவழிப்பினை முன்னின்று வழிநடத்திய கோதபாய ராஜபக்சவின் தலைமையில் ராணுவ உயரதிகாரிகளாக கடமையாற்றிய சவேந்திர சில்வாவும் கமால் குணரட்னவும், தங்கள் எஜமானின் கதிரையை காப்பாற்ற முனையும் செயற்பாடுகளாக அவர்களின் முரண்பட்ட கூற்றும், செயற்பாடும் காணப்படுகிறது. 

ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றால் அவரை எவரும் அசைக்க முடியாதென ஆட்சித்தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அவர் விரும்பினால் எந்த வேளையிலும் பதவி விலகலாமென தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

கோதபாயவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய அறுபத்தொன்பது லட்சம் மக்கள்தான் அவரை வீட்டுக்குப் போகுமாறு கேட்கின்றனர். இதற்கு ஆதரவாக இவரது ஆட்சியை ஆதரித்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க ஆரம்பித்துள்ளனர். ஆனாலும், ஜனநாயக மரபை பின்பற்ற கோதபாய தயாராக இல்லை. 

தமது பதவியை தாம் ஒருபோதும் துறக்கப்போவதில்லையென தமக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணிலிடமும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்குப் பின்னரும் தமக்கு ஐந்தாண்டு ஆணையை மக்கள் அளித்ததாக அவர் கூறுவது சர்வாதிகாரப் போக்கிலானது. 

பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிவதற்கு முன்னரே அந்த மொட்டு (சின்னம்) கருக ஆரம்பித்துள்ளது. மக்கள் கொந்தளிப்பு மேலோங்குகிறது. நாட்டில் பெரும் பட்டினி ஏற்படப்போவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ஆனால், கோதபாயவை பொறுத்தளவில் தமக்குப் பக்கபலமாக ராணுவம் இருப்பதாகக் கருதுகிறார். 

கோதபாயவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ எச்சரித்துள்ளதுபோன்று, நாட்டில் இரத்த ஆறு ஓடும் காலம் வருமா? பிலிப்பைன்சிலும், எகிப்திலும், துனிசியாவிலும் மக்கள் புரட்சி எந்த மாறுதலை ஏற்படுத்தியது என்பதை ராஜபக்ச குடும்பம் ஒரு தடவை எண்ணிப்பார்க்க வேண்டும். 

காலம் மாறும், காட்சிகள் மாறும் என்பர். இலங்கையைப் பொறுத்தளவில் ஜனநாயக காட்சிகள் ஊடாக எதேச்சாதிகார ஆட்சி பலமடையலாம் என்பதே பரவலாகத் தெரியும் காட்சி!

No comments