உக்ரைனில் ஐரோப்பாவில் மிகப் பொிய அணுமின்நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யாஐரோப்பாவின் மிகப் பொிய அணு மின்னிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைனின் சபோரிசியா மாநிலத்தில் எனர்கோடர் என்னுமிடத்தில் உள்ள அணுவுலை ஐரோப்பாவிலேயே மிகப்பெரியதாகும். இது செர்னோபில்லில் உள்ளதைவிடப் பல மடங்கு பெரியது என்றும் கூறப்படுகிறது.

உக்ரைனின் மின்தேவையில் 25 விழுக்காடு இந்த அணுமின் நிலையத்தில் இருந்தே பெறப்படுகிறது. இந்த அணுமின் நிலையத்தின் மீது இன்று அதிகாலை 5:20 மணிக்கு ரஷ்ய இராணுவம் எறிகணைத் தாக்குதல் நடத்தியது. எறிகணைத் தாக்குதலில் பயிற்சிக் கட்டடத்தில் தீப்பற்றி எரிந்தது.

தீயை அணைக்கச் சென்ற அவரக்காலச் சேவைகள் படையினரை முதலில் ரஷ்யப் படையினர் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பன்னாட்டு அணுவாற்றல் முகமை ஆகியோர் உக்ரைன் அவசரக்கால சேவைகள் படையினரை அணுமின் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கும்படி ரஷ்யாவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து ரஷ்யப் படைவீரர்கள் வழிவிட்டதால் அவசரக்காலச் சேவைகள் படையினர் அங்குச் சென்று தீயணைப்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுமின் நிலையத்தின் பயிற்சிக் கட்டடத்தில் பற்றி எரிந்த தீ முழுவதும் ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் அவசரக் காலச் சேவைகள் படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சபோரிசியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும், அதனை உக்ரைன் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து இயக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments