பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் அசமந்தப்போக்கு!இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) குறிப்பிட்டுள்ளார்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இராணுவமயமாக்கல் , இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் கூறியுள்ளார்.


சிறுபான்மை மக்களை சிரமப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உண்மையான நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதற்காக பூரண நோக்கத்துடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசரத் தேவையாக உள்ளதெனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்காகவும் தண்டனை பெறாதிருப்பதை தடுப்பதற்காகவும் நிறுவன, பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளார்.


பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை தாம் ஏற்றுக்கொண்டாலும், இலங்கையின் உத்தேச திருத்தங்கள் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைய போதுமானதாக இல்லை எனவும் மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பல வருடங்களுக்கு முன்னதாக முன்வைத்த பரிந்துரைகள், அவதானிப்புகளை முழுமையாக மீண்டும் பரிசீலனை செய்யுமாறு அவர் இலங்கை பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகி இரண்டு வருடங்கள் கடந்தாலும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையுடன் கூடிய திட்டமிடல் வரைபை இலங்கை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனிடையே, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல்களை பகிரங்கப்படுத்துமாறும் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments