ஊடக அமைச்சரிற்கு கறுப்புக்கொடி:யாழில் அதிரடி!யாழ் மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், கருப்பு பட்டி அணிந்து யாழ். ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி இவ் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க வெளியீட்டுப் பணியகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அமைச்சருடனான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ். ஊடக அமையத்தின் இணைப்பாளர் இலங்கையில் ஊடகவியலாளர்கள் என்பவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்று எங்களிடம் இருந்து ஒரு பாகுபாடும் இல்லை.


யுத்த காலத்தில், நாங்கள் நெருக்கடிகளை சந்தித்த வேளை எங்களுக்காக முன்னின்று களமிறங்கி போராடியவர்களில் கணிசமாக ஊடகவியலாளர்கள் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள்.


இந்நிலையில், தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளமை எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகின்றது.


அந்தவகையில், ஊடக அமைச்சரின் இன்றைய விஜயத்தின் போது எங்களுடைய எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்த விரும்பினோம். அதனடிப்படையில் நாங்கள் கருப்புப் பட்டிப் போராட்டம் ஒன்றை யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்தோம்.


அதன்பிரகாரம், கொழும்பில் அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அதிகரித்து வரும் ஊடகங்கள் மீதான வன்முறைக் கலாசாரத்தை நிறுத்தக் கோரியும், ஏற்கனவே யுத்த காலப்பகுதியில் வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் கொல்லப்பட்டும், காணாமல் ஆப்பட்டும் இருக்கின்ற 39 தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 41 ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்காக விசாரணைகளை முன்னெடுக்கக் கோரியும் இன்றைய தினம் கருப்புப் பட்டிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

நாங்கள் அனைவரும் கருப்புப் பட்டி அணிந்தவாறு அமைச்சரின் சந்திப்பில் கலந்து கொண்டோம். இதன்போது, எங்களுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தோம்.

அதாவது, சாயம்பூச வேண்டாம், இது எங்களுடைய உரிமை, அஹிம்சை வழியில் எங்களுடைய எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். இது ஒரு புரிதலாக அமைச்சருக்கு இருக்கும்.

கடந்த காலங்களில் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ, நஸ்ட ஈடோ இதுவரை கொடுக்கப்படவில்லை.

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது, பொறுப்புக்கூறப்படாத சூழலில் மீண்டும் தெற்கில் அதிகரித்து வரும் ஊடகவியலாளர் தாக்குதல், எங்களுக்கு கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றது.

அவ்வாறான சூழல் இல்லாமல், ஊடக சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தக் கருப்புப் பட்டி போராட்டம் இடம்பெற்றது என யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது.


No comments