மாவீரர் நெப்போலியனின் போர்வாள் 2.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம்


மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியவர் ஆவார். பல்வேறு ஐரொப்பிய பிரதேசங்கள் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர். 

கடந்த 1799-ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி, பிரெஞ்ச் கடற்கரையில் இருந்து ஆங்கிலேய கப்பல்கள் வெளியேறிய போது, நெப்போலியன் தனது படைகளுடன் முன்னேறிச் சென்று ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.

வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:-

“தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார்” என்றார்.

நெப்போலியனின் இந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது. பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது. ஆனால் ஜெனரல் மனைவி தனது கடனை அடைப்பதற்காக வாளை விற்றுள்ளார் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments