ஞானசாரரால் முடியாது!





இலங்கையினுடைய குடியகல்வு குடிவரவு அலுவலகங்களுக்கு முன்னால் சிங்கள இளைஞர்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.சிங்கள மக்களே இந்த நாட்டில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்.

அதேவேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட  அரசின் அமைச்சர்களாலேயே எதுவும் செய்யமுடியாத நிலைமை இருக்கும் பொழுது ஒரு நாட்டினுடைய ஜனாதிபதியால் உருவாக்கப்படுகின்ற செயலணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் எதையும் சாதித்து விட முடியாதெனவும் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,மனித குலத்துக்கு எதிரான செயற்பாட்டை செய்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால், அந்த நாட்டு மக்களுடைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதற்கு  எங்களுடைய நாடு உதாரணமாக இருக்கின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் கோத்தபாய ராஜபக்ஸ போன்ற தலைவர்களை கண்டிருக்கமாட்டார்கள். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கவேண்டி, அதிலிருந்து தப்பிக்க  தப்புக்கணக்கு போட்டு மீண்டும் சிங்கள மக்களிடம் தேசிய சிந்தனையை உருவாக்கி விட முடியும் என்று கோத்தபாய ராஜபக்ச முயல்கிறார்.

குற்றவாளியாக சிறையிலிருந்து பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரருடைய தலைமையில் ஒரு செயலணியை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். 

இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் தேசிய எழுச்சியை உருவாக்கி தன்னை ஒரு சிங்கள பௌத்த மக்கள் பெருந்தலைவராக காட்ட அவர் முயற்சிக்கிறார். சிங்கள மக்கள் மீண்டும் தவறிழைப்பவர் என்று நான் நம்பவில்லை. வடக்கு கிழக்கு மக்கள்  மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.


No comments