சிங்களவருக்கே 30 கோடி!

இலங்கை அரசு வரவு செலவு திட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் காணாமல் போனோரின் உறவுகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர, நிதி தேவையில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதை தவிர, நிதி தேவையில்லை என்ற விடயத்தை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தாம் தெளிவாக கூறியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டும் எனவும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையை முன்வைத்தே, தாம் மழை வெயில் பாராது, வீதிகளில் இறங்கி போராடி வருவதாகவும் வரவு செலவுத்திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையானது, தமக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

காணாமல் போன உறவுகளை சாட்டாக வைத்துக்கொண்டு, தமது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

வரவு செலவுத்திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தாம் முழுமையாக நிராகரிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

No comments