போராட்டத்தை விலக்க தயாரில்லை:ஸ்ராலின்!

இலங்கையில் ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள்

குறித்து அரசாங்கத்தால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.

‘அரசாங்கம் அளித்த தீர்வுக்கு நாங்கள் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. நாங்கள் மீண்டும் ஒன்று கூடி அது தொடர்பான இறுதி முடிவை எட்டும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம் ‘என்று ஸ்டாலின் கூறினார்.

இதனிடையே கூட்டத்தின் போது சபைத் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன, நிதி ஒதுக்கீடு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் உடனடியாக ஒரு தீர்வை வழங்க முடியாது என்றும் ஜனவரி 2022 வரை பணம் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாததால், இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் பங்கெடுத்த 31 தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments