கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு!

 


கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனது இறுதிக்காலத்தில் சிறுவர்களது நலன்களிற்காக அர்ப்பணித்துள்ளதாக கூறிவரும் கேபி தொடர்பில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ள போதும் அதனை பற்றி விசாரணை செய்ய முடியாத அழுத்தங்கள் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

அண்மையில் அவரது சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் தப்பித்து ஓடிய நிலையில் பின்னர் இலங்கை காவல்துறையால் அவர்கள் பிடிக்கப்பட்டு கேபியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சிங்கள இணையம் தெரிவித்துள்ளார்.

ஏந்நேரமும் பத்திற்கும் அதிகமான இலங்கை விசேட படைப்பிரிவின் பாதுகாப்பிலுள்ள கேபி தொடர்பில் அவரது மெய்பாதுகாவலர்கள் ஊடாக இத்தகைய தகவல் சிங்கள ஊடகத்திற்கு கிட்டியிருக்கலாமென நம்பப்படுகின்றது.

இதனிடையே யுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என்றும் குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் என்றும் தெரிவித்தார்.


No comments