தப்பிப்பது தாமதமாகின்றது?



கப்பம் கோரி தமிழ் இளைஞர்களை கடத்திக்கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி தப்பிப்பது தாதமாகின்றது.

சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் வசந்த கரன்னாகொட ஆகிய இருவருரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கடந்த 13ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.

அந்த நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (15) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.


2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் வௌ்ளை வேன்களை பயன்படுத்தி 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 14 ஆவது பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தொடர்ந்தும் முன்னகர்த்தப் போவதில்லையென சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கடந்த 13ஆம் திகதி அறிவித்திருந்தார்.


சட்ட மா அதிபரின் குறித்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் நேற்று (15) தீர்மானித்துள்ளது.


இதற்கிணங்க, வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர் மற்றும் வசந்த கரன்னாகொடவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments