அதிகாரத்தை கையில் எடுத்த கமல்!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகிச் சென்றனர்.

அவர்களில் பலரின் புகாரே, ‘கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை’என்பதுதான். இந்த நிலையில் இன்று (ஜூன் 26) காணொலி வாயிலாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய கமல்ஹாசன், அக்கட்சியின் தலைவர் பதவியோடு பொதுச் செயலாளர் பதவிக்கும் தன்னையே அறிவித்துக் கொண்டிருக்கிறார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த காணொலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன்,

“கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்”என்று சொல்லிவிட்டு கட்சி விஷயங்களைப் பேசினார்.

“ மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் ”என்று அறிவித்தார் கமல்.

கட்சிக்கு புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ. கருப்பையாவும், பொன்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏ.ஜி. மௌரியா கட்சியின் கட்டமைப்பை கவனிக்கும் துணைத் தலைவர் பொறுப்பிலும், தங்கவேலு களப்பணி மற்றும் செயல்படுத்துதல் பொறுப்புகளோடு துணைத் தலைவர் பொறுப்பிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனரான செந்தில் ஆறுமுகம் கடந்த தேர்தலுக்கு முன் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். இப்போது அவருக்கு தகவல் தொழில்நுட்பம் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளராக பொறுப்பு கொடுத்துள்ளார் கமல். அதே இயக்கத்தின் சிவ. இளங்கோவுக்கு கட்டமைப்பை கவனிக்கும் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், சரத்பாபு, ( மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்) ஸ்ரீப்ரியா சேதுபதி ( நிர்வாகக் குழு உறுப்பினர்) ஜி. நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

No comments