கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை :அல்வா!கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனின்  கூட்டு முயற்சியெனவும் பிரச்சாரப்படுத்தப்பட நாளையும் அடுத்த தினமும் மருந்து தெளிக்கவே பூட்டப்படுவதாக நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

கொரோனா கொத்தணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை மூடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் சமூக பரவல் குறித்து மக்கள் இடையே எழுந்த அச்சம் காரணமாக கரைச்சி பிரதேச சபையினால் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக தொழிற்சாலையின் பணிப்பாளர் சரிந்த உதான கிளிநொச்சியில் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

கரைச்சி பிரதேசசபை தவிசாளர் சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பிரகாரம் ஆடை தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடவும் தொடர்ந்து அதனை சுகாதார வைத்திய அதிகாரி மேற்பார்வையில் தொற்றுநீக்கவும் தொழிற்சாலை பணியாளர்களை பரிசோதிக்கவும் தடுப்பூசிகளை இடவும் படிப்படியாக பணிகள் தொடரவும் உடன்பட்டதாக தமிழரசு தரப்பால் செய்திகள் ஊடகங்களிற்கு கசியவிடப்பட்டிருந்தது.

எனினும் இருநாட்கள் மருந்து விசிற மூட சம்மதித்ததை இப்படி பிரச்சாரப்படுத்தி மக்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டனரேயென பொதுமக்களிடையே சீற்றம் எழுந்துள்ளது.


No comments