ஜோசப் ஆண்டகையின் பெயரில் சதுக்கம்!

 


ஜோசப் ஆண்டகையின் பெயரில் புதிய சதுக்கம் உருவாக்கப்படவேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் உயிரிழந்த பேராயர் இராயப்பு ஜோசப ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,பேராயரின் மறைவு, தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும். அவர் கத்தோலிக்க தெய்வமாக செயின்ட் ஆக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போரில் 40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை என்று ஐ.நா குழுவின் அறிக்கையை மறுத்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை. சிறீலங்கா அரசாங்கத்தால் 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக உலகுக்கு தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு வலயம் உள்ளே சென்ற தமிழர்களின் எண்ணிக்கைக்கும், இறுதியில் பாதுகாப்பு வலையத்திற்கு வெளியே சென்ற தமிழர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தின் உண்மையான எண்ணிக்கையினை அவர் வழங்கினார்.

இனப்படுகொலையின் போது 90,000 தமிழ் விதவைகள் மற்றும் 50,000 தமிழ் அனாதைகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பேராயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தாயகத்தில் நடந்த இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆற்றிய பணி மதிக்கப்பட வேண்டும்.

எனவே அன்னை தெரசாபோல் பேராயர் ஜோசப் இராயப்பு ஆண்டகையை வத்திகானில் கத்தோலிக்க செயின்ட் தெய்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று புனித பாப்பாண்டவரை நாங்கள் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


No comments