முன்னோர்கள் செஞ்ச தப்புனால இப்போ முச்சந்தில வந்து நிக்கிறோம்; சீமான் வேதனை!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, சென்னையை அடுத்த மதுரவாயல் தொகுதிக்கு உள்பட்ட போரூர் மேம்பாலம் அருகில், ஆவடியில் மாநகராட்சி அலுவலகம் அருகில், அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில், கிழக்கு முகப்பேர் கடைவீதியில், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில், மாதவரம் மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரச்சாரம் செய்தார்.

பின்னர், மாலையில் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் முதல் இரண்டு வட்டங்களில் தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நா.த.கட்சியின் தலைவர், நகரம் கிராமம் என்றெல்லாம் பார்க்காமல், விவசாயத்தைப் பற்றி அதிகமாகவே பேசுகிறார். விவசாயத்தின் தற்போதைய நிலையை விவரிக்கிறார். அத்துடன் தங்கள் கட்சி அதை எப்படியெல்லாம் மாற்றியமைக்கும்? விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை வளர்த்தெடுக்கமுடியும்? நஞ்சில்லாத உணவுப்பொருள்களை உற்பத்திசெய்வது, கிழங்கு வகைகளைப் பயிரிட்டு அதிலிருந்து மாவு தயாரிப்பது, மைதாவுக்கு மாற்றாக அதைப் பயன்படுத்துவது, பனை, தென்னையிலிருந்து கள் எடுப்பது, அந்தந்த வட்டாரத்துக்கு ஏற்ப விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பது எனத் தலைநகர வாக்காளர்களிடமும் விளக்கமாகப் பேசுகிறார். அத்தோடு சேர்ந்து இடையிடையே தேர்தல் அரசியலைப் பற்றியும் பேசி, எங்களுக்கும் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என முடிக்கிறார், சீமான்.

ஆவடியில் பேசுகையில், ” மின்சாரவாரியத்துல மூன்றரை லட்சம் கோடி கடனா கெடக்குது. ராமநாதபுரத்தில் அதானி மின்சாரம் தயாரிக்க எடம் குடுக்கிறான். அதுல அவரு போடுற முதலீடு 4 ஆயிரம் கோடி. இந்த காசு உங்ககிட்ட இல்லையா? இருக்கிற காச எடுத்தா 8 பட்ஜெட்டு போடலாம். ஏன் மின்னுற்பத்திக்கு போடமாட்டேங்கிற... வெளியில இருந்து வாங்குனா கமிசன் அடிக்கலாம். யூனிட்டுக்கு 50 காசு வச்சாகூட ஆயிரம் கோடி ரூவா ஓடிவந்துரும். இதனால்தான் இவய்ங்கள கமிசன் பாய்சுன்னு சொல்றம்.. முதலமைச்சர் ஆல் முதலமைச்சர்ஸ்.. ஆல் இண்டியா புரோக்கர்ஸ்.. பிரதமர் இண்டர்னேசனல் புரோக்கர்.. நாட்டுல எல்லாத்தையும் வித்துட்டான்ல.. 200 பொதுத்துறை நிறுவனங்கள விக்கப்போறான்.. இனி நம்ம நாடுன்னு நீங்களும் நானும் பேசமுடியாது.. அம்பானி மகனும் அதானி மகனும்தான் சொல்லமுடியும்.. ” என்றார் சீமான்.

’எல்லாம் முடிச்சுத் தள்ளிட்டான்.. உங்களுக்கு தண்ணி கெடைக்கல.. ஆனா உறிஞ்சி விக்கிற முதலாளிக்கு மட்டும் எங்க இருந்து வருது தண்ணீ.. ஒரு தட்டுப்பாடும் இல்லை.. ஏன்.. தேர்தல்வரைக்கும் தண்ணீ ஊத்துவான்.. எல்லாத்தையும் இலவசமா குடுத்தாங்களே அம்மா ஜெயலலிதா... தண்ணிய ஏன் இலவசமா தரல.. ஏன் தரமுடியாது.. தந்த என்னா.. முதலாளி பாதிக்கப்படுவான்.. அவன் பாதிச்சா என்னா.. கமிசன் தரமாட்டான்..” என்றவர்,

அதிமுகவின் ‘வெற்றிநடை போடும் தமிழகமே..’ பிரச்சாரப் பாடலைப் பாடிக்காட்டி, வெற்றிநடை போடுதானு ஒருத்தர் கேட்டார்...ஆமா பாட்டுல எல்லாம் போடுது, நாட்டுலதான் போடலை..னு சொன்னேன் என்று கிண்டலடித்தார்.

” எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போல

டெண்டுல்கரு சதம் அடிச்சா எங்க நாடு வல்லரசு

படிச்ச டிகிரிக்கெல்லாம் டீ மாஸ்டரு எங்க நாடு வல்லரசு

பங்குச்சந்தை ஏறுது மேல பங்குச்சந்தை ஏறுது மேல

வெளஞ்ச நெல்லு வெல ஊறுது கீழ எங்க நாடு வல்லரசு

வந்தே வந்தே மாதரம் நொந்து நொந்து சாகுறோம் ” என்று அவரும் ஒரு பாடலைப் பாடினார்.

மதுரவாயலில் பேசும்போது, ”எங்க முன்னோர் செஞ்ச பிழைகளால்தான் இப்ப முச்சந்தில வந்து நிக்குறோம்.. இதுக்காகத்தான் எங்களுக்கு வாக்களிக்கச் சொல்றோம்.. இதையெல்லாம் நெனைச்சா எங்களுக்கு போடுங்க.. இல்லை பழகிருச்சினு நினைச்சீங்கன்னா எங்களைத் தூக்கி சுடுகாட்டுல போட்ருங்க.. ஓட்டுக்காக நான் நிக்கல.. நாட்டுக்காக நிக்கிறேன்..” என்றும் சீமான் கூறினார்.

தமிழகத்திலிருந்து -இளமுருகு

No comments