சந்திரனின் மேற்பரப்பில் வெண்வெளி ஆய்வு மையம்!! ரஷ்யா சீனா கூட்டாக அறிவிப்பு!


ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆராய்ச்சி கட்டமைப்பை மற்ற நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியதன் 60ஆவது ஆண்டை விரைவில் கொண்டாட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக சீன, ரஷ்ய விண்வெளி அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி இன்டர்நேஷனல் சயின்டிபிக் லூனார் ஸ்டேஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு மையத்தில், சந்திரன் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளும், அதன் பயன்பாடு குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சீனா விண்வெளி ஆய்வுத்துறையில் தாமதமாகவே முன்னேற தொடங்கியது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலவிலிருந்து வெற்றிகரமாக பாறை மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டுவந்து சாதனைப் படைத்திருந்தது. இது விண்வெளித்துறையில் சீனாவின் அதிவேக வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கிய ரஷ்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சீனாவும் அமெரிக்காவும் கடும் சவால்களை அளிக்க தொடங்கியுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வதில் முன்னணியில் இருந்து வந்த ரஷ்யா, கடந்த ஆண்டு அந்த இடத்தை அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

No comments