ஈஸ்ரர் தாக்குதல்: தலைதெறிக்க ஓடும் ஐதேக

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தால், அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அந்தக் கருத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் பின்னர், நாட்டின் தலைவர் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்திலும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆகியோர் விரைந்து செயல்பட்டிருந்ததுடன், அதற்கமைய தாக்குதலின் பின்னர் இடம்பெறவிருந்த பாரிய பாதிப்புக்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவதினத்தன்று இரவு 9 மணியாகும் போது குண்டுதாரிகள் தொடர்பிலும் அவர்களின் அணிதொடர்பிலும் பொலிஸார் விவரங்களை பெற்றுக்கொண்டு, மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறாதவகையில் அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதனால் ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்புடன் செயல்படவில்லை என்று கூறமுடியாது.

அப்போது நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே பதவி வகித்தார். அவரே பாதுகாப்பு அமைச்சராகவும் செயல்பட்டார். அதனால் இந்தத் தாக்குதல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பு அவரையே சார்ந்துள்ளது.

எனினும் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னமும், தற்கொலைதாரிகளுக்கான உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்கள் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரானுக்கு அரச அனுசரணையுடன் ஊதியம் வழங்கியவர்கள் தொடர்பிலும் மற்றும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பிலும் எந்தத் தகவல்களும் சேகரிக்கப்படவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்திய போதிலும் , அதிலும் முக்கிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளித்திருந்தால், தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரது விவரங்களையும் அறிந்து கொண்டிருக்க முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தாக்குதலின் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தால் அது அவரதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும் கருத்தாகும். அந்தக் கருத்து ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடையதாக அமையாது எனத் தெரிவித்தார்.

No comments