ஈழத் தமிழ் உறவுகளின் நாடுகடத்தல்! பேர்லினில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள்  சிறிலங்காவுக்கு  நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில்  இன்றைய தினம் யேர்மனியின்

தலைநகர் பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. 

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் பல்லின மக்கள் கலந்துகொண்டு தமிழர்களை நாடுகடத்த வேண்டாம் என கோசங்கள் எழுப்பினர். யேர்மன்  நாட்டுக்கான மனிதவுரிமை ஆணையாளர் சிறிலங்காவில் மனிதவுரிமை நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்பதை அண்மையில்  தெரிவித்ததன் பின்னரும்  யேர்மன் அரசு இவ்வாறான மனிதநேயமற்ற முன்னெடுப்பை செய்வதை கண்டித்து  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்லின மக்கள் தமது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துகொண்டனர். பல இடதுசாரி அமைப்புகள், பசுமை இயக்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் எமது கோரிக்கைக்கும்  தமிழ் மக்களின் இப் போராட்டத்திற்கும் தமது சமூகவலைத் தளங்களிலும்  ஆதரவு தெரிவித்துள்ளன.

இறுதியில் உள்துறை அமைச்சரின் அலுவலகத்தின் சார்பில் வருகை தந்த அதிகாரியிடம் ஈழத்தமிழ் உறவுகளை நாடுகடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனும் அவசரகோரிக்கையாக மனு கையளிக்கப்பட்டது.

சமநேரத்தில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின்   சார்பாக கடந்த நாட்களாகவும்  இன்றும் பல்வேறு முறையில் அகதிகள் விவகாரத்திற்கு பொறுப்பான அதிகாரிகள்  ,கட்சிகள் ,அமைப்புகள் ,  யேர்மன் அரசியல்வாதிகளிடம் உயர்மட்ட கலந்துரையாடல்கள், மின்னஞ்சல் தொடர்பாடல்கள்  இணையவழி ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யேர்மன்  அரசின் இந்த நாடுகடத்தல் முயற்சி இரக்கமற்றது.கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்தும் யேர்மனியில்  வாழ்வதற்கு அனைவரும் இறுதிவரை குரல் கொடுப்போம் எனும் உறுதியோடு ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

No comments