பக்கதில் இருந்தேன்:ஏதும் பேசவில்லை-சீவீகே?

 


மாநகர சபையை நிர்வகிக்க முடியாதவர்கள், மாகாண சபையை நிர்வகிக்க முடியாதவர்கள் சமஷ்டி கேட்கின்றனர் என்று  இந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டுள்ளார். அதைக் குறை சொல்கின்றார். எங்களைக் குறையாகப் பேசுகின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கமளிக்க வேண்டிய, தெளிவுபடுத்த வேண்டிய, எதிர்க் கருத்து தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் உண்டு என விளக்கமளித்துள்ளார் சீ.வீ.கே.சிவஞானம் .

ஏனென்றால் மாநகர சபை சம்பந்தமாகவும் மாகாண சபை சம்பந்தமாகவும் அதிலே மிகத் தெளிவான பொறுப்பு எனக்கு இருக்கின்றது என்பதைக் காட்ட வேண்டும். முதலாவது மாநகர சபையை எடுத்துக் கொண்டால் இந்த அரசாங்கம் - இந்த இனவாத சக்திகள் எங்களுக்கு எதிராக - எங்கள் மக்களுக்கு எதிராக - எங்கள் இனத்திற்கெதிராக - மாநகரத்திற்கெதிராக செய்த அட்டூழியங்கள், அழிவுகளைச் சந்தித்தவர்கள் நாங்கள். உதாரணமாக 1977 சந்தைக் கடைகளை இரவோடு இரவாக எரித்தார்கள். நாங்கள் அந்தக் கடைகளைக் கட்டி ஒருமாதத்திலே கட்டி வர்த்தகர்களுக்கு வழங்கினோம். 1981 ஆம் ஆண்டு நூலகத்தை எரித்தார்கள். அதை நாங்கள் திரும்பக் கட்டி 1984 இல் திறந்தோம். திரும்ப 1985 ஆண்டு அதை எரித்தார்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சபையினுடைய கட்டடத்தை 1985 இல் அழித்தார்கள். அதையும் நாங்கள் திரும்ப அந்த நிர்வாகத்தை  எந்தவித தொய்வும் இல்லாமல் தொடர்ச்சியாக திறம்பட நடாத்தியது மட்டுமல்ல மாற்று இடத்திலே அமைத்து இன்று வரை எதுவித தொய்வும் இல்லாமல் எந்தவித குறையும் இல்லாமல் சிறப்பாக நடாத்தி வருகின்றோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த இடர்களுக்கும் மத்தியிலே இந்த நிர்வாகத்தை கொண்டு சென்றவர்கள் நாங்கள். ஆகவே இடர் நிர்வாகம் பற்றியும், நிர்வாகம் பற்றியும் எங்களுக்கு சரத் வீரசேகர பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை.

மாகாண சபையைப் பொறுத்தவரையிலேயே எங்களுடைய மாகாணம் தேசிய வருமானத்திலே கிட்டத்தட்ட 4 வீதத்திற்கு குறைந்த ஒரு வருமானம் உள்ள ஒரு மாகாணமாக இருந்த போதும்  கடந்த 30 வருடங்களாக அழிவுகள் செய்யப்பட்டு எத்தனையோ உயிரிழப்புகள், சொத்து இழப்புகளை ஏற்படுத்தியது இந்த அரசாங்கம்தான். விதவைகள் மற்றும் பெண் தலைமைத்து குடும்பங்களை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். இப்படி இருக்கையில் இந்த மாகாண சபையிலேயே நாங்கள் எந்த நிர்வாகத்தை எந்த சந்தர்ப்பத்திலும் தவறாக செய்யவில்லை. தனிப்பட்ட சில அரசியல் முரண்பாடுகள் இருக்கின்றது.  அரசாங்கத்திலும் இருக்கின்றது. 2018 மிக முக்கியமாக ஒக்டோபர் 26 புரட்சிகள் நடந்ததுதானே. அதை மாதிரி எங்களுக்குள்ளும் நடந்திருக்கலாம். ஆனால் மிக முக்கியமாக எங்களுடைய இரண்டு ஒதுக்கீடுகளை நான் குறிப்பிட வேண்டும். ஒன்று C.B.G என்று சொல்லக்கூடிய அந்த ஒதுக்கீடு 2422 மில்லியன் எங்களுக்குக் அலேக்கேஷனாகக் கிடைத்தது. அதிலே 2350 மில்லியனைச் செலவு செய்துள்ளோம். அது ஒரு பக்கம்.

அதேபோல இந்த P.S.D.G என்ற குறிக்கப்பட்ட ஒதுக்கீட்டிலே நாங்கள் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை கோரிய தொகை 46051 மில்லியன் ஆகும். அதற்கு எதிராக அவர்கள் அங்கீகரித்த தொகை 13952 மில்லியன் ஆகும். ஆகவே எங்களுடைய கோரிக்கை எதையுமே சாதகமாக பரிசீலிக்காமல் கிட்டத்தட்ட முன்றில் ஒரு தொகையைதான் எங்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். அதிலையும் விடுத்த தொகை 10214 மில்லியன். அந்த 10214 மில்லியனுடன் எங்களுடைய நிதியையும் சேர்த்து  நாங்கள் 11081 மில்லியன் செலவு செய்திருக்கின்றோம். ஆக அரசாங்கம் நாங்கள் கோரிய நிதியையே எங்களுக்குத் தரவில்லை. 46 ஆயிரம் மில்லியன் கேட்ட இடத்திலே 13 ஆயிரம் மில்லியன்தான் எங்களுக்கு தந்திருக்கிறார்கள்.

ஆகவே ஒதுக்கீடுகளைத் தராமல் - நிதி வசதி செய்யாமல் - எங்களை ஒரு முடக்க நிலையில் வைத்துக் கொண்டு நாங்கள் நிர்வகிக்கவில்லை, மக்களுக்கான சேவை செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டு அதிலும் இந்த அரசாங்கத்துக்கு குற்றச்சாட்டுவது மிகப் பாரதூரமான கண்டிக்கத்தக்க ஒரு விடயம். அவர் மாகாண சபை உருவாக்கம் வேண்டாம் என்று சொல்கிறார். இந்த மாகாண சபை வடக்கு கிழக்கு மட்டும் முறைமையாக வந்ததல்ல. இந்த நாட்டுக்கானது. இந்த நாட்டுக்கான அதிகாரப் பகிர்விலே ஒரு அம்சம். சிங்களப் பிரதேசங்கள், மாகாணங்களுக்கும் இது பொருந்தும். உலகளாவிய ரீதியிலேயே - ஐக்கிய நாடுகள் நிர்வாகக் கட்டமைப்பிலே அதிகாரப் பகிர்வு பரிந்துரைக்கப்பட்ட ஒரு விடயம். அதற்கு மாறாக அவர் கருத்துச் சொல்லலாம். அது அவருடைய உரிமை. ஆனால் அதே ஏறாக மாகாண சபை முறை இல்லை. நான் ஏற்கமாட்டேன் என்று இனவாதம் பேசிக்கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாது. எங்களுக்கு நிர்வாகம் செய்யமுடியாது என்று சொல்வதெல்லாம் விதண்டாவாதம். எங்களுடைய நிதியை தந்து, எங்களை சுயமாக இயங்க விட்டிருந்தால் நாங்கள் நிர்வாகம் செய்வோம் என்பதை செய்து காட்டியிருப்போம். அதற்கு எங்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்திக் கொண்டு - முடக்கிக் கொண்டு இப்படியான குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைப்பதை மிகப் பொறுப்போடு முன்னாள் மாநகர சபை ஆணையாளர் என்ற ரீதியிலும் நீண்ட காலம் அதனுடைய ஆணையாளராக இருந்தவன் என்ற வகையிலும் மாகாண சபையிலே கடந்த 7 வருடங்கள் மேலாக இருந்தவன் என்ற ரீதியிலும் 5 வருடங்களாக தவிசாளராக இருந்த வகையிலும் என்னுடைய கண்டனத்தையும் ஆட்சேபணையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.  

அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது,

கேள்வி: விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் நேற்று சொல்லியிருந்தார் தான் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று இது தொடர்பில் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்.

பதில்: அவர்தானே சொல்லுகிறார்.  எங்களுடைய கட்சித் தலைமைகளோடு பேசும் உரிமை அவருக்கு இருக்கு. அவர் பேசலாம். பேசிப் பார்க்கலாம்.

கேள்வி: ஏற்கனவே தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுடன் தான் தொடர்பில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் அது பற்றி என்ற கூறுகிறீர்கள்

பதில்: அவர் முதல் அவருடன் தொடர்பு இருக்கிறது என்றும் மதிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார் இது வரவேற்கத்தக்க விடயம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலேயே அந்த இணைப்பு சாத்தியமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கேள்வி: யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவில் மீண்டும் ஆனோல்ட் அவர்களை நீங்கள் தேர்வுக்கு நியமித்தது தொடர்பில் மக்கள் மத்தயில் பலத்த எதிர்ப்பு காணப்படுகின்றதுடன் கேள்வி கேட்கப்படுகின்றது.  ஏற்கனவே இரண்டு தடவைகள் மாநகர சபை பாதீட்டில் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே மீண்டும் அவரை நியமித்தது பிழை என்று அவர்கள் கருதுகின்றார்கள் இது தொடர்பில் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியில் எப்படி பார்க்கின்றீர்கள்.

பதில்: இதில் முதலாவது விடயம் பரிசீலிக்கப்பட்ட கூட்டங்களில் நானும் இருந்தனான். எடுக்கப்பட்ட தீர்மானங்களில் என்னுடைய கருத்து இரண்டாக இருந்தது. முதலாவது ஆனோல்ட் திரும்ப போட்டியிடுவது என்று முன்வைத்தமைக்கு காரணம் இருந்தது. அவ்வாறு அவர் செய்யலாமா? போட்டியிடலாமா என்ற கேள்வி இருந்தது. அந்தக் கேள்விக்குப் பதில் அளித்தவன் நான்தான். சட்டப்படி அவர் போட்டியிடலாம். அதாவது ஏற்கனவே இருந்த ஒரு சட்டம் மாநகர முதல்வர் பதவியை இழந்தவர் அந்த அங்கத்தவத்தையும் இழந்ததாக கருதப்படுவார் என்று  இருந்த மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் உப பிரிவு 2 (ஆ) 2012 ஆம் ஆண்டில் 21 ஆம் இலக்கச் சட்டத்தின் படி நீக்கப்பட்டு மாநகர முதல்வர் பதிவியை ஏதேவொரு வகையிலேயே வெரிதாக்கினாலும் அவர் தொடர்ந்து உறுப்பினராக இருப்பார் என்ற ஒரு கருத்து இருந்தது. அவர் ஒரு உறுப்பினராக இருக்கின்ற பொழுது மாநகர சபை முதல்வர் தேர்விலே போட்டியிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியவன் நான். அது ஒரு சட்டத் தெளிவுதான்.

ஆனால் அதற்கு மேலாக மரபு அல்லது பொறுப்பு என்பதை அவரும் தீர்மானித்திருக்கலாம். ஆனால் அந்தக் கலந்துரையாடலிலே ஜனநாயக ரீதியாக - அந்த உறுப்பினர்களின் கலந்துரையாடலிலே 4 பேர் அதை மாற்றம் செய்யலாம். செய்வது விரும்பத்தக்கது என்று கூறினர்கள். 12 பேர் ஆனோல்ட்டே திரும்ப முதல்வர் தேர்வில் நிற்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். அதை விட ஆனோல்ட் தரப்பிலே கூறப்பட்ட இன்னொரு விடயம்  5 பேரை மேலதிகமாக ஆதரவு தர தன்னால் வைக்க முடியும் என்று சொன்னார். அது ஒரு முக்கியமான விடயமாகும். இதை விட வேறு எவருடைய பெயரையும் அந்தக் கலந்துரையாடலிலே யாரும் முன்வைக்கவும் இல்லை. கலந்துரையாடவும் இல்லை. ஆகவே அதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை.

இரண்டாவது முக்கியமாக கஜேந்திரகுமார் அல்லது டக்ளஸ் மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும்  வேறு ஒருவரை தெரிவு செய்தால் தாங்கள் பரிசீலிப்போம் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாரின் கட்டுப்பாட்டிலே மணிவண்ணன் ஆட்கள் இல்லை. அப்படியிருக்க அவருடைய வாக்கை நாங்கள் எப்படி நம்புகின்றது. நல்லூர் பிரதேச சபையில் நாங்கள் பிரதேச சபை தவிசாளரை மாற்றினோம். அவர் தோற்கடிக்கப்பட்டார். அப்ப நீங்கள் சொல்கின்ற மாதிரி நடந்ததா. இது உண்மையாகவே திட்டமிட்டசெயல்தான். அரசியல் வேறுபாடுதான். ஆனால் எனக்கு சிலர் கூறினார்கள் ஆனோல்டோ தியாகமூர்த்தியோ தாமாகவே ஒதுங்கியிருக்கலாமே என்று ஒரு கேள்வி என்னிடமும் கேட்கப்பட்டது. அது அவர்களுடைய சுய தீர்மானம். ஆனால் எங்களுடைய முடிவு எடுக்கிற பக்கத்திலே  தெளிவாக அந்த உறுப்பினர்களுடைய ஜனநாயக கருத்தின் அடிப்படையிலேதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள்தான் அந்த சபையிலே வாக்களிக்கிறவர்கள். நானோ, மாவையோ, சிறிதரன் அவர்கள் கூட அந்தக் கூட்டத்திலேயே பங்குபற்றியிருந்தார். சிறிதரன் முதலில் தான் மாறுப்பட்ட கருத்தைக் கொண்டிருந்ததாகவும் அன்றைய தினம் ஆனோல்ட் அவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கின்றபொழுது ஆனோல்ட்டைதான் திரும்ப முன்மொழிவுதான் பொருத்தமானது என்று அங்கும் சொன்னார். எங்களோட மேலும் பேசும் போதும் சொன்னார். இவ்வாறான கலந்துரையாடலிலே ஆனோல்ட்டைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலை உருவாக்கிவிட்டது. அதுதான் என்னுடைய நிலைப்பாடு.

கேள்வி: குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கூட்டமைப்பு மாநகர சபையில் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்றால் நேரிலோ அல்லது எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால் அதை பற்றி பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். அப்படி ஏதாவது கோரிக்கை முன்வைக்கப்பட்டதா? சிலர் இடத்தில் அவரைச் சந்தித்து ஆதரவு பெற்றிருந்தால் ஆனோல்ட் வென்றிருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் : இல்லை அந்தமாதிரி சாதகமான நிலைக்கு வந்து இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்றுதான் நான் இப்ப நினைக்கிறேன். ஏனென்றால் குறிப்பாக இரு சாராருக்கும் மாவை சேனாதிராசா அவர்கள் குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அதற்கு அவர்கள் ஆதரவு வழங்கவில்லை. ஆனோல்ட்டுக்கு என்று இல்லை. இரு சபைகளுக்கும் நீங்கள் ஏனைய சபைகளுக்கு  ஆதரவு வழங்கியதைப் போல ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்தார். ஏனைய சபைகளுக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றனர்தானே? இருவருக்கும் கஜேந்திரகுமாருக்கும் டக்ளஸும் தகவல் அனுப்பியிருந்தார்.

கேள்வி: இந்த இரு சபைத் தெரிவுகள் நடந்த அன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இத் தெரிவு சட்டவிரோதமான தெரிவு என்றும் இதற்கு முழுப் பொறுப்பும் மாவை சேனாதிராசாதான் என்று உறுதிப்பட எழுத்து மூலம் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா அதற்குரிய பதிலை விரைவில் வழங்குவேன் என்று சொல்லியிருந்தார். அக்கடிதத்தில் சுமந்திரன் சொல்லியிருக்கிறார். சட்டத்திற்கு முரண் என்று இது பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்தவரையிலே எனக்குத் தெரிந்த சட்டத்தின்படி, நான் சட்டத்தரணி அல்ல. சுமந்திரன் அவர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி. ஜனாதிபதி சட்டத்தரணி அதை நான் மறுதலிக்கவோ, நிராகரிக்கவோ, முரண்படவோ இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்த சட்டத்தின்படி நான் இந்த மாற்றங்களுக்கூடே கடந்த 60 வருடங்கள் வாழ்ந்தவன் என்ற வகையிலேயே இருக்கிற சட்டப்படி சம்பிரதாய மரபுவழி வேறு. சட்டப்படி ஆனோல்ட் தேர்விலே போட்டியிடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்பது என்னுடைய கருத்து.

கேள்வி : நேற்று வவுனியாவில் ஜெனீவாப் பிரேரணை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. எல்லாக் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவோம் என்று கூறியுள்ளார்கள். தமிழரசுக் கட்சி சார்பில் ஏதும் வியூகங்கள் ஏதாவது வகுத்திருக்கிறதா?

பதில்: இல்லை. இப்பொழுது அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுவொரு ஆரம்ப கட்டத்திலே இருக்கிறது. சில நேரம் மூன்று தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால் அது நல்லது. குறிப்பாக இப்பொழுது முன்வைக்கப்படுகிறது பிரேரணை முதலிலே ஒரு தப்பு அபிப்பிராயம் இருந்தது. அது பற்றி சுமந்திரன் சொல்லியிருக்கிறார். சுமந்திரனுடைய வரவு என்று கஜேந்திரகுமாரும், விக்கினேஸ்வரன் அவர்களும் மறுதலித்ததாகவும் இப்பொழுது அது வெளிநாட்டில் இருந்து வரையப்பட்ட என்று சொன்னதை ஏற்றுக் கொள்வதாக சுமந்திரன் அவர்கள் கூறினார். இதிலே சுமந்திரன் தயாரித்தது அல்ல. வெளியிலே இருந்தவர்கள்தான் தயாரித்தவர்கள் என்று சொல்லியிருந்தால் முரண்பாடுகள் குறைந்தும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: இப்பொழுது அரசாங்கத்தினால் இலங்கையில் உள்ள பாடசாலைகளில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விமானப் படையைக் கொண்டு கற்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்,

பதில்: இது பிழையான செயல். அதாவது  மியன்மார் நிர்வாகத்தைப் போல ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதிலையும் அங்கமான ஜனநாயக விரோதமான சிவில் நிர்வாகத்திற்கு விரோதமான செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.  

கேள்வி : மாநகர சபையில் முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரிப்பார்களா அல்லது எதிர்ப்பார்களா?

பதில்: இப்பொழுது இதற்கு பதில் சொல்லமுடியாது. ஏனென்றால் அந்தந்த உறுப்பினர்கள் அச்சமயத்தில் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லக்கூடும். ஆனோல்ட்டால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தையே பல குறைகள் சொல்லப்பட்டது. அதே மாதிரி என்ன குறை குற்றங்களை பேசக்கூடியவர்கள் ஆய்வு செய்யக் கூடியவர்கள் மாநகர சபையின் எங்களுடைய உறுப்பினர்கள். அவர்கள் அதனைப் பரிசீலித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

 கேள்வி: அண்மையில் இந்திய துணைத் தூதுவருடன் மாநகர சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் மணிவண்ணனுடன் நீங்களும் சந்தித்திருப்பதாக ஒரு முறைப்பாடு வந்திருக்கின்றது. என்ன சந்திப்பு நடந்திருக்கிறது. உங்களுக்குள் ஏதாவது டீல் இருக்கின்றதா? இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: இதில் அரசியல் நாகரிகம் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. இது ஆளுநருடைய  ஒரு வருட ஆரம்ப தேனீர் விருந்து நிகழ்வு. வழமையாக எந்த ஆளுநர் இருந்தாலும் அவர் வருட ஆரம்பத்தில் தேனீர் விருந்து அளிப்பது  இயற்கை. அதைத்தான் தற்போதைய ஆளுநரும் செய்தார். அதற்கு நானும் போயிருந்தேன். மாநகர முதல்வர் மணிவண்ணனும் வந்திருந்தார்கள். இந்தியத் துணைத் தூதுவ பிரதித் தூதுவரும் வந்திருந்தார்கள். மணிவண்ணன் எனக்கு எதிரி என்றோ நான் நினைக்கவில்லை. அவர் அப்படி நினைப்பார் என்றோ நான் நினைக்கவில்லை. அங்கு போனால் ஒருவருக்கொருவர் கைகொடுப்பது நாகரிகம். நானும் அவர்களுக்கு கைகொடுத்து விட்டு தான் கதிரையில் அமர்ந்தனான் அது ஒரு நாகரிகம் அவ்வளவுதான். நான் இந்தியத் துணைத் தூதுவ பிரதித் தூதுவருடனோ எந்தவிதமான அரசியல் பேசவில்லை. அவர்களுக்கு அருகில் இருந்ததுதான் அதைவிட ஒன்றுமே நான் பேசவில்லை. என்று கூறினார் அவைத் தலைவர்.

No comments