எங்களிற்கு கறுப்பு நாளே!


இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து  கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனையீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதிவரை நடத்த போவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது. 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் வடக்கில் வரும் 2ம் தகதி தொடக்கம் 6 ம் திகதி வரை கிளிநொச்சியிலும் கிழக்கில் திருகோணமலையில் வரும் 3ம் மற்றும் 4ம் திகதிகளிலும் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம் பெறவுள்ளதுடன் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறும் மாபெரும் கவனையீர்ப்பு நீதிப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


மேலும் அவர்கள் குறிப்பிடும் போது வரும் ஐநா மனித உரிமை கூட்ட தொடரில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு காத்திரமான நடவடிக்கைக்கு வலியுறுத்தி அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பதுடன் இலங்கை அரசு ஐநாவையும் உலக நாடுகளையும் ஏமாற்ற காலம் காலமாக அமைக்கும் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் இம்முறையும் ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று கண்துடைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள OMP தொடர்பில் ஐநா ஆணையாளர் வெளியிட்ட கருத்திலும் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர். இவ் OMP ஐ நிராகரிப்பதாக ஏற்கனவே தாம் அறிவித்து விட்டதாகவும் இதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


எனவே காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆன எமது பிரச்சினைகள் மட்டும் இன்றி வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அனைத்து அடக்கு முறைகளுக்கு எதிராக ஐநாவும் உலக நாடுகளும் ஒன்றாக இணைந்து தீர்வை பெற்றுத்தர வேண்டும் என தமது ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments