சங்கரியை பொருட்படுத்த வேண்டாம்:ஊடக அமையத்தில் அரவிந்தன்!

தமிழர் விடுதலைக் கூட்டணியை பாதிக்கின்ற விதத்தில் செயலாளர் நாயகம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் .அவருடைய கருத்து

தனிப்பட்ட கருத்தாகும் எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேஷ்ட துணைத்தலைவர் ச.அரவிந்தன் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இன மக்கள் ஒன்றிணைந்து ஓரணியில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரகேசக அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை ஆதரித்து தனது நிலைப்பாடும் ஒரே மாதிரியுள்ளதாக குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் எனவும் அதிலும் இலங்கை தமிழரசுக் கட்சியை தடை செய்யவேண்டும் என்றும் கூறிய கருத்தானது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளரின் தனிப்பட்ட கருத்தாகவே எடுக்கவேண்டும் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்து அல்ல இது தொடர்பில் கட்சியின் பிரமுகர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு இதற்கு மறுப்புத் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

இன்றைக்கு தமிழ் மக்கள் பலவிதமான அடுக்குமுறைக்குள் குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் அடக்குமுறைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் இச் சூழ்நிலையில் இலங்கையில் இருக்கக்கூடிய அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம் அவ்வாறான ஒரு காலத்தில் கட்சியின் செயலாளர் செயற்பட்டது முறையல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலத்தில் பல கட்சிகளே ஒருங்கிணைந்து செயற்பட்ட தேவை இன்றும் இருக்கின்றது அந்தத் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது. எங்கள் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளும் கொள்கை அடிப்படையில் செயற்படவேண்டிய காலகட்டத்தில் பொறுப்பற்றதனமான கருத்துக்களை வெளியிடுவது தமிழ் மக்களை பாதிக்கின்ற செயற்பாடாகும். எனவே கட்சியின் செயலாளரது கருத்தானது தனிப்பட்ட கருத்தாகவே கொள்ளப்படவேண்டியது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் மத ரீதியான செயற்பாடுகள் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழலில் தான் இன்று நாம் இருக்கின்றோம். மத அனுஷ்டானங்கள் என்றாலும் சரி தற்போதை கொரேனாத் தாக்கத்தினால் உயிர் இழக்கின்ற சடலங்களை எரிக்கின்ற விடையத்திலும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலைமை இருக்கின்றது. அது மட்டுமன்றி இந்துக்களின் புனித நாளான கார்த்திகை விளக்கீட்டின் போது ஆலயங்களுக்குள் பொலிஸார் சப்பாத்துக் காலணிகளை அணிந்து அடக்கு முறையில் ஈடுபட்டதை நாம் கண்டித்திருக்கின்றேன் இவ்வாறான சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தின் சிறுபான்மை இனத்தவர்களின் அடக்கு முறையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் எனவே அனைத்து சிறுபான்மை இனங்களும் ஒன்றுபட்டு ஒருமித்து செயற்படவேண்டும் என்பதே கோரிக்கையாகும் என்றார்.


No comments