முன்னுதாரணமாகவேண்டிய முதல்வர் மணி?

யாழ்.மாநகர சபையை கட்சி பேதமின்றி முன்னேற்ற முன்வாருங்களென புதிய  முதல்வர் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே ஈ.பி.டி.பி. இன் ஆதரவினால் மணிவண்ணன் முதல்வராகியிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. டக்ளஸ் தனது முகநூலில் இதனை தெரிவித்துள்ளார்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவினால் யாழ். மாநகரின் புதிய முதல்வராக தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மணிவண்ணனுக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி. உடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு சுதந்திரக்கட்சி  உறுப்பினரும்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 உறுப்பினர்களுமாக மொத்தம் 21 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனோல்டிற்கு ஆதரவாக 20 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு இன்றையதினம் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

முன்பதாக இது குறித்த அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் விடுத்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 16 ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 3 வாக்குகளனால் பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு மீண்டும் முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்யும் வகையில் 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 ஏ பிரிவின் கீழ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் அடிப்படையில் யாழ். மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது இதன்போதே புதிய முதல்வராக மணிவண்ணன் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments