ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் காணாமல் போன அகதி


கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் தடுப்பு முகாமிலிருந்து காணாமல் போன ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி எங்கே என ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் அகதிகள் நல வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

உடற்பயிற்சி கூடத்திலிருந்து காவலாளிகளால் ஈரானிய அகதி வெளியேற்றப்பட்டது முதல் அவரைக் காணவில்லை எனச் சொல்லப்படுகின்றது. 

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளின் நிலை குறித்து அவர் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்த ஒரு நபராக ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் பசிபிக் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் அமைந்துள்ளன. 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருந்த இந்த அகதி வலுக்கட்டாயமாக பிரிஸ்பேன் இடைத்தங்கல் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த வலுக்கட்டாயமான நடவடிக்கைக்கு எதிராக பல போராட்டங்களும் நடந்திருந்தன.  

இவ்வாறான சூழலில் ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி காவல் அதிகாரிகள் அழைத்துச் சென்றதன் தொடர்ச்சியாக காணாமல் போகியுள்ளது பல கேள்வி எழுப்பியுள்ளன. அவர் எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்  Refugee Action Coalition அமைப்பின் ஐன் ரிண்டோல். 

No comments