கொடுங்கோன்மை நீட்சியில் ராஜபக்சக்களின் தொடர் மீட்சி! பனங்காட்டான்


கடந்தாண்டின் ஜனதிபதித் தேர்தலில் முதல் வெற்றி. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதப் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி. இப்போது இருபதாவது திருத்தத்தில் பெருவெற்றி. உள்வீட்டுக்காரர் வாலாட்ட, இருபதைத் தோற்கடிக்கப் போவதாக அறைகூவிய எதிர்க்கட்சி எட்டு எம்.பிக்களை பறிகொடுத்துள்ளது. அடுத்தாண்டின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்தின்போது மேலும் எத்தனை பேரை எதிர்த்தரப்பு பறிகொடுக்கும். வேட்டி போனால் பரவாயில்லை, கௌபீசணத்தையாவது காப்பாற்றுவார்களா?

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற கனவுலகப் பாடலுடன் இதனை ஆரம்பிப்பது பொருத்தமாகத் தெரிகிறது. 

கோதபாய அரசு முன்னெடுத்த அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான விடயம் இது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை இதனை நிறைவேற்றக் கிடைக்குமா என்ற கேள்வியை அனேகமாக சகலரும் கடந்த வாரங்களில் எழுப்பி வந்தனர். 

உள்வீட்டுக்குள்ளேயே எதிர்ப்புகளும் சவால்களும் அதிகமாக இருந்ததால், இத்திருத்தம் நிறைவேறுவது கடினம் என்ற கருத்தே முதன்மை பெற்றிருந்தது. கடந்த வாரம் இப்பத்தியின் இறுதியில் இடம்பெற்ற ஒரு வரி - இருபதை நிறைவேற்ற தேவையான எண்ணிக்கை கோதாவிடம் உள்ளது, சறுக்கினால் அதற்கானவர்களை பசில் தயாராக வைத்திருக்கிறார் - என்று அமைந்திருந்தது. 

இவை இரண்டுமே சரி என்பதை இந்த மாதம் 22ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு காட்டியுள்ளது. 

21ம் 22ம் திகதிகளில் இடம்பெற்ற இத்திருத்தத்தின் மீதான விவாதத்தின் பின்னர் இதற்கான இரண்டாம் மூன்றாம் வாக்களிப்புகள் இடம்பெற்றன. இரண்டிலும் திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் கிடைத்ததால், திருத்தம் மூன்றிலிரண்டுக்குத் தேவையான

149 வாக்குகளைவிட மேலதிகமாக ஏழினைப் பெற்று நிறைவேறியுள்ளது. 

இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ராஜபக்சவினருக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் மொத்தம் 149 ஆசனங்கள் கிடைத்தன. 

ஐக்கிய தேசிய கட்சியும், பௌத்த பிக்குகளின் எமது மக்கள் சக்தி கட்சியும் தங்களின் ஒவ்வொரு தேசியப் பட்டியல் எம்.பிக்களை இதுவரை நியமிக்காததால் இரு இடங்கள் காலியாகவுள்ளன. இதனால் தற்போதைய எம்.பிக்களின் எண்ணிக்கை 223 மட்டுமே. இதன் பிரகாரம் மூன்றிலிரண்டுக்கான இலக்கு 149 ஆகும். 

கோதபாய தரப்பில் அந்த எண்ணிக்கை கைவசம் இருந்ததால் அவர்கள் அச்சமடையத் தேவையில்லை. ஆனால், இரட்டை பிரஜாவுரிமைக்காரர் தேர்தலில் போட்டியிடவும் அரசாங்கத்தில் உயர்பதவிகளை வகிக்கவும் இருபதாவது திருத்தம் இடமளிப்பதை ஆளும் தரப்பிலுள்ள சில அமைச்சர்களும் எம்.பிக்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். 

வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, விஜேதாச ராஜபக்ச, விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் இந்த எதிர்ப்பாளர்கள். இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தை நீக்காவிட்டால் இத்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லையென இவர்கள் கூட்டாக கோதாபாயவை நெருக்கி வந்தனர். 

கோதபாய இதனையிட்டு பதற்றம் அடையவில்லை. எதிர்கட்சிகளிலிருந்து தேவையானவர்களை தமது தம்பி பசில் பெற்றுத் தருவாரென்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்குக் காரணம். 

உள்வீட்டுக்குள் இருந்து குழப்பம் விளைவிப்பவர்களை எப்படி அடக்குவதென்பது கோதாவுக்கு கைவந்த கலை. அவர்களின் அமைச்சுப் பதவி பறிபோகும். தேசியப் பட்டியல் ஊடாக வந்தவர்கள் அதனை இழப்பர். ஏற்கனவே ஊழல் விசாரணைகள் நிலுவையில் உள்ளவர்களின் கோவைகள் தூசு தட்டி எடுக்கப்படும். 

எனினும், மதிநுட்பமான ராஜந்திர ராணுவப் பாதையை கோதா தெரிந்தெடுத்தார். குழப்பக்காரரை 21ம் திகதி இரவு கூட்டாக அழைத்து, தமது கோபத்தை வெளிக்காட்டாது ஒரு நாடகம் நடத்தினார். நவம்பர் மாதம் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இரட்டைப் பிரஜாவுரிமை விடயம் சுலபமாக தீர்க்கப்படுமென்பதே அவர் எடுத்துக் கூறியது. 

எங்கே இப்படி ஒரு பதில் வரும், தங்கள் எதிர்ப்புகளைக் கைவிட்டு பதவிகளைக் காப்பாற்றலாம் என்றிருந்தவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. சந்தர்ப்பத்தை கைவிட விரும்பாது ஒட்டுமொத்தமாக இருபதை ஆதரிக்க இவர்கள் முன்வந்தனர். 

இவர்கள் மனம் மாறிவிட்டனர் என்பதற்காக கோதா தனது ரகசிய திட்டத்தை கைவிடவில்லை. பசில் ஊடாக எதிர்த் தரப்பினரையும் கொள்முதல் செய்து கொண்டார். இதனாலேயே இருபதை நிறைவேற்ற 156 வாக்குகள் கிடைத்தன. 

உள்வீட்டுக்குள் எதிர்ப்பு கிளப்பியவர்கள் எதிர்காலத்திலும் இவ்வாறு வாலாட்டக்கூடாது என்பதற்காக கோதா - பசில் போட்ட திட்டம் இது. இப்போது திருத்த வாக்களிப்பு விபரத்தைப் பார்ப்போம். 

223 உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகர். இவர் வாக்களிக்கவில்லை. பத்தொன்பதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன (சுதந்திரக் கட்சியின் தலைவரான இவர் தற்போது எம்.பியாக உள்ளார்) வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. ஆக, வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள் 221 பேர். 

இவர்களில் 156 பேர் ஆதரவாகவும் 64 பேர் எதிராகவும் வாக்களித்தனர். கோதாவுக்கு எவ்வாறு 156 வாக்குகள் கிடைத்தன? எதிர்பார்க்கப்பட்டவாறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டுப்போர் குத்துக்கரணம் அடித்தனர். அதாவது, எதிர்க்கட்சியில் இருந்தவாறு கோதா தரப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகே முதலாமவர். முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த பைசால் காசிம், நசீர் அகமட், எம்.எச்.எம். ஹரிஸ், எம்.எஸ். தௌபிக் ஆகியோர் நால்வர். அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த இட்சாக் ரகுமான், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ரகீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அரவிந்தகுமார் ஆகியோர் மிகுதி மூவர். 

மொத்தத்தில் இவர்கள் எண்மரும் சஜித் பிரேமதாசவின் பிரதான எதிர்க்கட்சிக் கூட்டைச் சேர்ந்தவர்கள். இந்த எண்மரின் கட்சிகளின் தலைவர்களும் இருபதை எதிர்த்து வாக்களிக்க, இவர்கள் ஆதரித்து வாக்களித்து மூன்றிலிரண்டுக்கும் மேலான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்ததை கவனிக்க வேண்டும்.

இதில் சுட்டவேண்டிய முக்கிய விடயமொன்றுண்டு. முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களிக்க, அவரது கட்சியினர் நால்வர் ஆதரித்து வாக்களித்தனர். நல்லாட்சி அரசில் பத்தொன்பதாவது திருத்தத்தை நிறைவேற்றும்போது அமைச்சராகவிருந்த ரவூப் ஹக்கீம் இருபதாவது திருத்தத்தை எதிரத்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தமக்காகத் தாமே வாதாடியவர். 

இதனால் அவர் இடம் மாறி வாக்களிக்க முடியாத நிலை. ஆனால் தமது கட்சியின் சகாக்கள் நால்வரை அவரே கோதா தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க அனுமதித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் கசிந்தது. 

அதேபோன்ற நிலைமையே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும். அதன் தலைவர் றிசாத் பதியுதீன் கைதாகி இப்போது காவலில் உள்ளார். இவர் கோதா தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பினாலும் அதே அரசால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலை அதற்கு இடம்கொடுக்காது. எனினும், சில அற்ப எதிர்கால நன்மைகள் கருதி தமது கட்சியின் எம்.பி. ஒருவரை இருபதுக்கு ஆதரவாக வாக்களிக்க அனுமதித்ததாக சொல்லப்படுகிறது. 

மனோ கணேசனை தலைவராகக் கொண்ட தமிழ் முற்போக்கு முன்னணியின் அரவிந்தகுமார் பல்டி அடித்ததன் பின்னணி என்ன உதவி அமைச்சர் பதவி? ராஜாங்க அமைச்சர் பதவி? கையூட்டல்? மனோ கணேசன்தான் தெளிவுபடுத்த வேண்டும். 

ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோரின் பாதுகாப்பு, எதிர்கால அரசியல் வாழ்வு என்பவை இவர்களது கட்சிகளைச் சேர்ந்த ஐவரதும் அரசாங்க ஆதரவுடன் இணைத்துப் பார்க்க வேண்டியவை. முக்கியமாக, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மேலாண்மை அரசு மேற்கொண்டு வரும் அசுர நடவடிக்கைகளையும் மறந்து, ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் எதிரணியில் இருந்தவாறு, அரச தரப்புக்கு ஆதரவு வழங்குதென்றால் இதற்குப் பின்னால் ஏதோ இருக்கிறது. 

பர்மா என இன்று அறியப்படும் மியன்மார் நாட்டில் ரோகின்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக அந்நாட்டின் பௌத்த ஆட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒத்ததாக இலங்கை முஸ்லிம்களை சிங்கள அரசாங்கம் நடத்துகிறது. இரு நாடுகளும் தேரவாத பௌத்த மரபுக்கு முதலிடம் வழங்கும் நாடுகள். 

உண்மை நிலைமை எதுவாக இருப்பினும், ஆறு முஸ்லிம் எம்.பிக்களும் சிங்கள தமிழ் எம்.பிக்கள் இருவரும் ஆளும் தரப்பின் உள்வீட்டில் குழப்பம் ஏற்படுத்த விரும்பியவர்களை அடக்கியுள்ளனர். இது கோதாவுக்குக் கிடைத்த பெருவெற்றி. 

இரண்டாம் மூன்றாம் வாக்கெடுப்புகளில் ஆதரவாக 156 வாக்குகளையும் எதிராக 65 வாக்குகளையும் கோதா அணி பெற்றதாயினும், பிரச்சனைக்குரிய இரட்டைப் பிரஜாவுரிமை சம்பந்தமான வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளையும் எதிராக 64 வாக்குகளையும் பெற்றது வாசுதேவ - விமல் வீரவன்ச - உதய கம்மன்பில அணியினருக்கு ராஜபக்சக்கள் திட்டமிட்டு முகத்தில் பூசிய கரி. 

2019 நவம்பர் 16ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தல் வெற்றி என்பவற்றைத் தொடர்ந்து, பலப்பரீட்சையாக நடைபெற்ற இருபதாவது திருத்தத்திலும் வெற்றி பெற்று ஒரு வருடத்துக்குள் ராஜபக்சக்களின் கொடுங்கோன்மை ஆட்சி ராணுவ செல்நெறிக்கு செங்கம்பளம் விரித்துள்ளது. 

இவர்களின் தடை தாண்டும் ஓட்டத்துக்கு இன்னுமொரு கட்டம் உண்டு. அது, புதிய அரசியலமைப்பு சட்டம். 

இருபதாவது திருத்தத்தில் எட்டு எம்.பிக்களை பறிகொடுத்த எதிர்க்கட்சியினர், புதிய அரசியலமைப்பின்போது மேலும் எத்தனை பேரை பறிகொடுக்கப் போகிறார்கள்? வேட்டி போனால் பரவாயில்லை, கௌபீசணத்தையாவது காப்பாற்றுவார்களா?





No comments